ஒகி புயலுக்குப்பிறகு 45 வகையான வெளிநாட்டு பறவைகள் மட்டுமே வந்துள்ளன ஆராய்ச்சியாளர் தகவல்

ஒகி புயலுக்குப்பிறகு குமரி மாவட்டத்துக்கு 45 வகையான வெளிநாட்டு பறவைகள் மட்டுமே வந்துள்ளன என்று மணக்குடியில் நடந்த விழாவில் பறவைகள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிரப் தெரிவித்தார்.

Update: 2018-03-03 22:30 GMT
நாகர்கோவில்,


குமரி மாவட்டத்தில் சுசீந்திரம், தேரூர், மணக்குடி காயல் உள்ளிட்ட குளப்பகுதிகளில் பறவைகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்கண்ட குளங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள குளங்கள், மணக்குடி காயல் பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

இதனால் இந்த பகுதிகளில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி வனத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் 82 வகையான பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்தது. மேலும் ஒகி புயலுக்குப்பிறகு பல வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து இல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது.


இந்தநிலையில் குமரி மாவட்ட மாணவ–மாணவிகளிடையே பறவைகள் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவிலை அடுத்த மணக்குடி பகுதியில் நேற்று பறவைகள் திருவிழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பறவைகள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிரப், ஷைலஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் பறவைகள் ஆர்வலர் டேவிட்சன் மற்றும் மாணவ– மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட பறவைகள் என்ற தலைப்பில் பறவைகள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிரப் மாணவ– மாணவிகளிடம் பேசியபோது, “வெளிநாடுகளில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 23 கிராம் மட்டுமே எடைகொண்ட கொசு உல்லான் பறவைகள் அதிகமாக வருவது வழக்கம். ஆனால் இந்தமுறை பெரும்பாலான வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வரவில்லை. ஆண்டுதோறும் குமரி மாவட்டத்துக்கு வந்து செல்லக்கூடிய 90 வகையான வெளிநாட்டு பறவைகளில் தற்போது 45 வகையான பறவைகள் மட்டுமே வந்துள்ளன. ஒகி புயலுக்குப்பிறகுதான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது“ என்றார்.

மேலும் செய்திகள்