பெரம்பலூர் மாவட்ட விடுதிகளில் உணவு தயாரிக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் காப்பாளர்களுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் உணவு தயாரிக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று விடுதி காப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் சார்பாக கூட்டுறவு பண்டக சாலை கிடங்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர்கள், தனியார் விடுதி காப்பாளர்கள், மாவட்ட விளையாட்டு பயிற்சி மைய விடுதி காப்பாளர் மற்றும் பானிபூரி கடை உரிமையாளர்களுக்கு, தரமான முறையில் உணவு தயாரித்து வழங்குவது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சவுமியா சுந்தரி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், கூட்டுறவு பண்டகசாலை கிடங்கில் இருந்து வழங்கப்படும் அனைத்து உணவுப்பொருட்களுக்கும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஒருமாத காலத்திற்குள் அச்சிடப்பட வேண்டும். விடுதி காப்பாளர்கள், உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்த்து தரமான உணவினை தயாரித்து பரிமாற வேண்டும். உணவு பொட்டலத்தில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும்.
மேலும் விடுதிகளில் உணவு தயார் செய்யப்படும் இடத்தை சுகாதாரமாக வைத்திருக்கவும், சமையல் செய்பவர்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கவும், குடிநீர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டு அதற்கான பதிவேடுகளை பராமரிக்கவும், பார்வையாளர்கள் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் காப்பாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவுப்படி அனைத்து உணவு நிறுவனங்கள், அனைத்து தனியார் மற்றும் அரசு விடுதிகள் உள்ளிட்டவற்றில் வாட்ஸ்-அப் புகார் எண் 9444042322 கொண்ட சுவரொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்-அப் எண்ணில் நுகர்வோர்கள் புகார் அளிக்்கலாம். கொடுக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும்.
உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் பற்றிய விளக்கங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் இயங்கும் உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விடுதி காப்பாளர்கள், பானிபூரி கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.