திருச்சி மாவட்டத்தில் ரூ.3 கோடியே 60 லட்சத்தில் நகை தொழில் குழுமம்

திருச்சி மாவட்டத்தில் ரூ.3 கோடியே 60 லட்சத்தில் நகை தொழில் குழுமம் அமைக்க அனுமதி கிடைத்து உள்ளதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.;

Update: 2018-03-02 22:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் தங்க ஆபரண நகை தயாரிக்கும் தொழிலகங்கள் சுமார் 2 ஆயிரம் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் பாய்லர் தயாரிப்பு, அரிசி ஆலைகள், கோரைப்பாய் தயாரிப்பு போன்ற தொழில்களுக்கு இணையாக தங்க ஆபரண நகை தொழிலகங்களும் சிறப்பாக இயங்கி வருகின்றன.

இத்தகைய சிறப்புடைய தங்க ஆபரண தொழிலை நவீன மயமாக்கும் விதமாக குழுமத் தொழில் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய எந்திரங்கள் மற்றும் கருவிகள், தளவாடச் பொருட்கள் வாங்கிடும் பொருட்டு நிதி ஒதுக்கீடு ரூ. 3¼ கோடி மானியமாக வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 3 கோடியே 60 லட்சம் ஆகும். இக்குழுமத்தின் கீழாக பொது உபயோக மையம் விரைவில் அமைந்திட மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைந்திட உள்ள பொது உபயோக மையத்தின் மூலம் தற்போதைய தங்க ஆபரண நகை உற்பத்தியாளர்கள் நவீன டிசைன்கள், வேலைப்பாடுகள் கொண்ட நகைகளை தயாரித்திட ஏதுவாக அமையும். இதனால் தங்க ஆபரண நகை உற்பத்தி அதிகமாவதோடு அல்லாமல் வேலைவாய்ப்பு பெருக்கமும், நவீன தொழில் நுட்ப அனுபவமும் தொழிலாளர்களுக்கு கிடைத்திடும். மேலும் வர்த்தக ரீதியாக சந்தை விரிவாக்கம், ஒட்டுமொத்த தொழில் உற்பத்தி, உற்பத்தியில் சிக்கனம், உற்பத்தி விரிவாக்கம் ஆகியவை திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிலகங்களுக்கும் சிறந்த அளவில் கிடைத்திடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்