168 பயனாளிகளுக்கு ரூ.21½ லட்சம் மதிப்பில் ஆடுகள்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனங்கூர் மற்றும் கலியனூரை சேர்ந்த 168 பயனாளிகளுக்கு ரூ.21.50 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

Update: 2018-03-02 22:30 GMT
நாமக்கல்,

கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனங்கூர் மற்றும் கலியனூர் ஊராட்சிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார சின்னையன், பள்ளிப்பாளையம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு ஆனங்கூரில் 84 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 75ஆயிரத்து 200 மதிப்பீட்டிலும், கலியனூரில் 84 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்து 200 மதிப்பீட்டிலும் என மொத்தம் 168 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் தலா 4 ஆடுகள் வீதம் 672 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை வழங்கினார்.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தோக்கவாடி, ஆனங்கூரில் எரிசக்தித்துறையின் தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு கழகத்தின் சார்பில் ரூ.7 கோடியே 16 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் துணைமின் நிலையம் அமைக்கும் பணியினை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். இத்துணைமின்நிலையத்தின் மூலம் பள்ளிபாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து 3-ல் 1 பகுதி மின்சாரமும், சங்ககிரி துணை மின்நிலையத்தில் இருந்து 1 பகுதி மின்சாரமும் சேமித்து இப்பகுதிக்கு அருகில் உள்ள குட்டச்சி பாளையம், காடச்சநல்லூர், அண்ணாநகர், தோக்கவாடி மற்றும் இப்பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக விரைவு மின்வசதி வழங்கவும் ஏதுவாக அமையும் எனவும் அவர்கள் கூறினர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக மின்தொடர் அமைப்பு கழகத்தின் மேற்பார்வை பொறியாளர்கள் பால்ராஜ், ஜோதிநாதன் உள்பட அரசு துறை அலுவலர்கள் பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்