கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

Update: 2018-03-02 22:45 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க தேசிய கோமாரி நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 லட்சத்து 59 ஆயிரத்து 100 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு 3 வாரங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

இந்த திட்டத்தை நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கிராமத்தில் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் இந்த முகாம்கள் மூலமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பசுக்கள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணி வருகிற 21-ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி வருகிற 22-ந்தேதி மேற்கொள்ளப்படும். இதற்காக 79 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி, தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர்கள் வேடியப்பன் ராஜேந்திரன், நல்லம்பள்ளி தாசில்தார் பழனியம்மாள், கால்நடை டாக்டர்கள் ஞானசேகரன், மாதப்பன், சரவணன், பொற்செழியன், சார்லஸ் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்