உடுமலை நகரில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

உடுமலை நகரில் பொள்ளாச்சி-தளி சாலை சந்திப்பில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்.

Update: 2018-03-02 22:00 GMT
உடுமலை,

உடுமலை நகரில் பொள்ளாச்சி சாலை-தளி சாலை சந்திப்பில் தானியங்கி சிக்னல் உள்ளது. இந்த சந்திப்பில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து இருக்கும். உடுமலை மத்திய பஸ்நிலைய பகுதியில் இருந்து வரும் பஸ், கார், லாரி, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவை இந்த சந்திப்பு வழியாக தளி சாலையில் செல்லும். அதுபோல் தளி சாலையில் வரும் வாகனங்கள் இந்த சந்திப்பு வழியாகத்தான் பொள்ளாச்சி சாலைக்கும், பழனி சாலைக் கும் செல்லவேண்டும். இந்த நிலையில் தற்போது சந்திப்பு பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் உடுமலை மத்திய பஸ் நிலைய பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தளி சாலைக்கு திரும்பும் போது, சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் ஊர்ந்து செல்லவேண்டியுள்ளது.

இதன்காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களில் பலர் தட்டுத்தடுமாறி செல்லும்போது, அந்த பகுதியில் கீழே விழுந்து, எழுந்து செல்லும் நிலை உள்ளது.

எனவே இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்