போலீசார் போல் நடித்து, நகைப்பட்டறையில் ரூ.52 லட்சம் நகைகளை கொள்ளையடித்த 4 பேர் கைது

நகைப்பட்டறையில் போலீசார் போல் நடித்து ரூ.52 லட்சம் நகைகளை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு சதி திட்டம் தீட்டி கொடுத்த ஊழியரும் சிக்கினார்.;

Update: 2018-03-02 22:00 GMT
மும்பை,

மும்பை பைதோனியில் மனோஜ் சமந்தோ என்பவருக்கு சொந்தமான நகைப்பட்டறை உள்ளது. இங்கு கடந்த மாதம் 23-ந்தேதி 4 பேர் வந்தனர். அவர்கள் பட்டறையில் இருந்த ஊழியர்களிடம் தங்களை குற்றப்பிரிவு போலீசார் என கூறினார்கள்.

பின்னர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் டோம்பிவிலியில் உள்ள நகைப்பட்டறை உரிமையாளர் வீட்டில் இருந்து ரூ.80 லட்சம் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்தனர்.

இங்குள்ள நகைகளையும் கைப்பற்ற வந்துள்ளதாக கூறிய அவர்கள், பட்டறையில் இருந்த ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வைரநகைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

பின்னர் இது குறித்து நகைப்பட்டறை உரிமையாளர் விசாரித்ததில் அவர்கள் போலீசார் இல்லை என்பதும், போலீசார் போல் நடித்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருந்ததும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் பைதோனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். நகைப்பட்டறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் 4 பேரின் உருவமும் தெளிவாக பதிவாகி இருந்தது. இதை வைத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், 4 பேரும் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் விஷால் சவான்(வயது40), சுனில் பெராவோ(35), நிலேஷ் ஆரேகர்(30), சாகர் வாக்(30) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் நகைப்பட்டறையில் நகைகளை கொள்ளையடிப்பதற்கு சதி திட்டம் தீட்டி கொடுத்ததில் பட்டறையில் வேலை பார்த்து வரும் ஊழியர் லட்சுமண் போஸ்லே(31) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் ரூ.5 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்