ருசியாக சமைக்காத மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட கணவரின் மனு தள்ளுபடி

ருசியாக சமைக்காத மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட கணவரின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2018-03-02 22:45 GMT
மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் குடும்ப நல கோர்ட்டில் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு செய்திருந்தார். அதில், “எனது மனைவி, எவ்வளவு முறை கூறியும் தனது பேச்சையும், தனது பெற்றோரின் பேச்சையும் மதிக்கவில்லை, காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கிறார். தாமதமாக சமைக்கிறார். அவர் சமைக்கும் உணவில் துளியும் சுவை இல்லை.

அதுவும் வேலையில் இருந்து தாமதமாக வீடு திரும்பும் நாட்களில் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தரமறுக்கிறார். எனக்காக நேரம் ஒதுக்க மறுக்கிறார். எனவே என் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்கவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை குடும்பநல கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தாதெட் மற்றும் சாரங் கோட்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மனுதாரரின் மனைவி தாமதமாக எழுந்திருப்பதும், சுவையின்றி சமைப்பதும் கணவரின் சிறிய தேவைகளை பூர்த்தி செய்யாததும் மிகவும் கொடுமையான விஷயமாக தெரியவில்லை.

இந்த வழக்கில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், அந்த பெண் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர். அவர் வேலையுடன் கூடுதல் சுமையாக காலையும், மாலையும் சமையல் செய்துள்ளார், வேலை முடிந்து வரும் வழியில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார். வீட்டு வேலைகளை செய்துள்ளார். அவ்வாறு இருக்கையில் அவர் வேலை செய்யவில்லை என்று குற்றம்சாட்டுவது தவறு” என்றனர்.

மேலும் குடும்பநல கோர்ட்டு நீதிபதி, மனுதாரர் ஒவ்வொரு முறையும் தண்ணீர் எடுத்துத்தர கூட மனைவியின் கையை எதிர்பார்ப்பதை கண்டித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

மேலும் செய்திகள்