திண்டிவனத்தில் பட்டப்பகலில் துணிகரம் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை

திண்டிவனத்தில் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-03-02 22:00 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் வகாப் நகரை சேர்ந்தவர் அனந்தகுமார். இவர் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி(வயது 54). இவர் கிளியனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை அனந்தகுமார் வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் சாந்தி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கூடத்துக்கு சென்றார்.

இந்த நிலையில் மதியம் சாந்தியின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சாந்திக்கும், அனந்தகுமாருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் உடனே வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சாந்தி, அனந்தகுமார் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவர்களுடைய வீட்டுக்குள் புகுந்து 40 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு பின்வாசல் வழியாக தப்பிச்சென்றுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர் குமார் வரவழைக்கப்பட்டு கொள்ளை போன வீட்டில் பதிவான தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை போன நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் 20-க்கும் மேற்பட்ட இடத்தில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள் வீட்டில் அதிக அளவில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க எங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தலைமை ஆசிரியை சாந்தி வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த இதே தலைமை ஆசிரியை சாந்தியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இது தவிர கடந்த மாதம் எங்கள் பகுதி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் 40 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக குற்றவாளிகள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளோம். போலீசார் சரியான முறையில் ரோந்து பணி மேற்கொள்ளாத காரணத்தால்தான் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்