சிதம்பரம் அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சிதம்பரம் அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.;
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தில் மதுரை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள்(வயது 70) என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர், வழக்கம் போல் பூஜை முடிந்த பிறகு இரவில் கோவிலை பூட்டி சென்றார்.
மறுநாள் காலையில் சென்று பார்த்த போது, கோவிலின் முன்பக்க இரும்பு கேட் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கலியபெருமாள் கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அம்மன் கழுத்தில் கிடந்த, 2 கிராம் தங்க செயின், சிறிய வெள்ளி கிரீடம், கோவில் மணி ஆகியன திருடு போய் இருந்தது. மேலும் அங்கிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது.
இரவில் கோவிலின் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் நகை மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கலியபெருமாள் சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக் கிறது.