கோவையில் ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 8 பவுன் நகையை பறித்த 2 ஆசாமிகள்

கோவையில் ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 8 பவுன் நகையை பறித்து விட்டு தப்ப முயன்ற 2 ஆசாமிகளை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-03-02 21:45 GMT
சரவணம்பட்டி,

கோவை காளப்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் தினேஷ். இவருடைய மனைவி கலையரசி (வயது 32). இவர் நேருநகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கலையரசி தனது ஸ்கூட்டரில் கோவில்பாளையத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது கோவை காளப்பட்டி ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென கலையரசி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து மர்ம ஆசாமிகளை விரட்டி சென்றனர்.

பின்னர் மர்ம ஆசாமிகள் சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே சரிந் தது. இதில் கீழே விழுந்த அவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து, கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றிவேல் (24), சக்திவேல் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். காயம் அடைந்த 2 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்