அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலா

நெல்லையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

Update: 2018-03-02 22:00 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட சுற்றுலா துறையின் மூலம் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறையின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மூலைக்கரைப்பட்டி, கல்லணை, துலுக்கர்பட்டி, ரஸ்தா ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை, எளிய மாணவ- மாணவிகள் 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்த சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

3 பஸ்களில் பள்ளி மாணவ- மாணவிகள் நெல்லை டவுன் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து நேற்று காலை புறப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு சுற்றுலா சின்னம் பொறித்த தொப்பி, பை ஆகியவைகள் வழங்கப்பட்டன. அப்போது மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், நெல்லை தாசில்தார் கணேசன், உதவி சுற்றுலா அலுவலர் நித்ய கல்யாணி மற்றும் ஆசிரியைகள் உடன் இருந்தனர்.

கிருஷ்ணாபுரம், கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் பார்வையிட்டு பின்பு அங்கிருந்து கன்னியாகுமரி காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், அரசு அருங்காட்சியகம், பகவதிஅம்மன் கோவில் ஆகிய பகுதிகளை பார்த்து விட்டு மாணவ-மாணவிகள் நெல்லை திரும்புகிறார்கள்.

மேலும் செய்திகள்