தனியார் நிறுவன ஊழியர் கொலை: அந்தமான் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் அந்தமான் வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

Update: 2018-03-02 22:45 GMT
சென்னை,

அந்தமான் தீவை சேர்ந்தவர் விகேஷ் வர்கீஸ்(வயது 24). இவர், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்து ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அதே லாட்ஜில் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த ராஜேஷ்(30) என்பவர் தங்கி இருந்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

லாட்ஜில் இருந்தபோது ராஜேஷ், விகேஷ் வர்கீசை கிண்டல் செய்ததால் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் களை லாட்ஜ் மேலாளர் கண்டித்துள்ளார். இதன்பின்பும் விகேஷ் தகராறு செய்ததால் அவரை லாட்ஜில் இருந்து வெளியேற்றினர். இதனால், ஆத்திரம் அடைந்த அவர், தன்னை லாட்ஜில் இருந்து வெளியேற்ற காரணமாக இருந்த ராஜேஷை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி 6.12.2011 அன்று லாட்ஜிக்கு வந்த விகேஷ், அங்கிருந்த ராஜேஷை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் இறந்தார். இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விகேஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் டீக்ராஜ் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், குற்றம்சாட்டப்பட்ட விகேஷ் வர்கீசுக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்