சென்னையை கலக்கிய போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது: குடியரசு தின விழாவில் பந்தாவாக பங்கேற்றது அம்பலம்

சென்னையில் மாமூல் வசூலித்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். குடியரசு தின விழாவில் அவர் பந்தாவாக பங்கேற்றது தற்போது அம்பலமானது.

Update: 2018-03-02 23:45 GMT
சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பந்தாவாக மோட்டார் சைக்கிளில் வலம் வந்தார். சாலையோரம் உள்ள கடைக்காரர்களை மிரட்டுவது, பாதுகாப்பு பணியில் இருக்கும் ரோந்து போலீசாரை அதட்டுவது உள்ளிட்ட பந்தா காரியங்களில் அவர் ஈடுபட்டார்.

மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் உட்கார்ந்து கதைபேசும் காதல் ஜோடிகளை விரட்டியடித்தார். அவரது செயல்பாட்டை அந்த பகுதி மக்களே பாராட்ட தொடங்கினர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கூட அவருக்கு சல்யூட் அடித்து நின்றனர்.

நேர்மையான சப்-இன்ஸ்பெக்டர் போல வலம்வந்த அவர் திடீரென வசூல் வேட்டையில் இறங்கினார். காதல் ஜோடிகளிடம் மிரட்டி பணம் பறித்தார். சாலையோரம் உள்ள கடைக்காரர்களிடம் சென்று மாமூல் வாங்கினார். திருவல்லிக்கேணியில் விடுதி ஒன்றில் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார்.

அந்த விடுதிக்கு வாடகை கொடுக்கவில்லை. மேலும் விடுதி அருகே உள்ள ஓட்டலில் 2 மாதங்களாக பணம் கொடுக்காமல் சாப்பிட்டு வந்தார். பகலில் வெளியே செல்வதில்லை. விடுதி அறையிலேயே இருந்தார். மாலையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சுற்றி வந்தார். இவ்வாறு அவர் சென்னையை கலக்கி வந்தார்.

அவர் தங்கியிருந்த விடுதியில் ஆயுதப்படையில் பணியாற்றும் 2 போலீஸ்காரர்களும் தங்கி இருந்தனர். அவர்களுக்கு இந்த பந்தா சப்-இன்ஸ்பெக்டர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் இதுபற்றி உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உளவுப்பிரிவு போலீசார் அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தாலும் தலையில் அவர் தொப்பி வைப்பதில்லை. கடந்த 2 வாரங்களாக அவரை பின்தொடர்ந்து சென்று விசாரணை நடத்தியதில் அவரது குட்டு வெளிப்பட்டது.

பந்தாவாக வலம்வந்த அவர் போலி சப்-இன்ஸ்பெக்டர் என்று தெரியவந்தது. எனவே அவரை கைது செய்யும்படி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பர்வேஸ்குமார் உத்தரவிட்டார். இதன்பேரில் உதவி கமிஷனர் ஆரோக்கியபிரகாசம் மேற்பார்வையில் ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிந்து போலி சப்-இன்ஸ்பெக்டரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காரிபட்டியை சேர்ந்த அசோக்ராஜ் (வயது 28) என தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரி. போலீஸ் வேலைக்கு சேர ஆசைப்பட்டு அந்த கனவு நிறைவேறாததால் சப்-இன்ஸ்பெக்டராக சீருடை அணிந்து சென்னையில் பந்தாவாக வலம் வந்துள்ளார்.

அவர் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் சென்னை கோட்டை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் சென்றுள்ளார். ஜனவரி 26-ந் தேதி அன்று மெரினாவில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியிலும் பாதுகாப்பு பணியில் மற்ற போலீசாரோடு நின்று பந்தாவாக பணியாற்றியது தற்போது அம்பலமானது.

இதையடுத்து அவர் பயன்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் சீருடை, மாமூல் தொகையாக வசூலித்த ரூ.65 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்ட நிகழ்ச்சியிலும் அசோக்ராஜ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதை போலீசார் மறுத்தனர். அசோக்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஜனவரி 15-ந்தேதியில் இருந்து அசோக்ராஜை காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்