தேனி மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
உணவகங்கள், டீக்கடைகள், திருமண மண்டபங்களில் பாலித்தீன் பைகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி,
தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவகங்கள், டீக்கடைகள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களில் உணவு பொருட்கள் வழங்கிட பாலித்தீன் பைகள், பாலித்தீன் தாள்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தம்ளர்கள் மற்றும் தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சூடான உணவுப்பொருட்களை பாலித்தீன் பைகளில் கட்டுவதாலும், பாலித்தீன் பொருட்களில் சூடான பொருட்களை வைத்து சாப்பிடுவதாலும் புற்றுநோய், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அத்துடன் இயற்கை மாசுபாடும் ஏற்படுகிறது.
எனவே, சமைத்த உணவு பொருட்களை வாழை இலை அல்லது தட்டுகளின் மூலமே பரிமாற வேண்டும். பொதுமக்களுக்கு தரமான சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
வியாபாரிகளும் பாலித்தீன் பைகள் விற்பனையை தவிர்க்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கு பாலித்தீன் பயன்பாடு உள்ள இடங்கள் பற்றிய தகவல் தெரிந்தால் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு, 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.