ஆந்திராவில் இருந்து கோவைக்கு சொகுசு காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கோவைக்கு சொகுசு காரில் கடத்தி வந்த 216 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேனியை சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-03-02 22:45 GMT
கோவை,

கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்று வருகிறார்கள். கடந்த 3 நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் வெளியூரை சேர்ந்த வியாபாரிகள், தங்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒரு கும்பல் ஆந்திராவில் இருந்து கோவைக்கு அதிகளவில் கஞ்சாவை கடத்தி வந்து, இங்குள்ள சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கும்பலை பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனிப்படையை சேர்ந்த போலீசார் கோவை-மருதமலை ரோட்டில் உள்ள சீரநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு சொகுசு கார் வந்தது. உடனே போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காருக்குள் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் வந்த காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அந்த காருக்குள் தலா 2 கிலோ எடை கொண்ட 108 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர்கள், தேனி அருகே உள்ள முத்தலாம்பாறையை சேர்ந்த தர்மர் (வயது 50), அவருடைய தம்பி இருளாண்டி (43), ஆண்டிப்பட்டி குமாரபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (33), ஆண்டிப்பட்டி, பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன் (23) என்பதும், இவர்கள் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது. கோவையில் கஞ்சாவை விற்பனை செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கு இந்த கஞ்சாவை கொடுப்பதற்காக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள சிந்தப்பள்ளியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்ததுடன், 216 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் ரொக்கப்பணமும், அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட மேலும் பல வழக்குகள் உள்ளன.

மேலும் செய்திகள்