கர்நாடக அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் பெங்களூரு பாதுகாப்பு நடைபயணம்

கர்நாடக அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் பெங்களூரு பாதுகாப்பு நடைபயணம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் கலந்துகொண்டனர்.

Update: 2018-03-02 22:30 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் வித்வத் என்ற பட்டதாரி வாலிபர் மீது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.ஏ.ஹாரீசின் மகன் முகமது நலபட் நடத்திய தாக்குதல், பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்கள், போக்குவரத்து நெரிசல் பிரச்சினை உள்ளிட்ட 10 அம்ச பிரச்சினைகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறி கர்நாடக அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் பெங்களூருவை பாதுகாப்போம் என்ற கோஷத்துடன் நடைபயணம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

நடைபயணத்திற்கு முன்பு பெங்களூரு கவிபுரத்தில் உள்ள கவிகங்காதரேஸ்வரர் கோவிலில் பா.ஜனதாவினர் சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் கெம்பேகவுடா சிலைக்கு மாலை அணிவித்தனர். அதன் பிறகு பசவனகுடியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக இந்த நடைபயணம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், அனந்தகுமார், சதானந்தகவுடா, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.அசோக், அரவிந்த் லிம்பாவளி, ரவிசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் நூற்றுக்கணக்கான பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் கர்நாடக அரசை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த நடைபயணம் ஹனுமந்தநகர் பகுதியில் வந்தபோது, அங்கு காங்கிரசார் கூடி நின்று பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து அங்கிருந்து திருப்பி அனுப்பிவைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நடைபயணம் முடிந்ததும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூரு நகருக்கு தகவல் தொழில்நுட்ப நகரம் என்ற பெயர் இருந்தது. பூங்கா நகரம், முதலீட்டாளர்களின் சொர்க்கம் என்றெல்லாம் பெங்களூரு நகரம் அழைக்கப்பட்டது. ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு அந்த பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. மத்திய அரசு செயல்படுத்திய எந்த திட்டத்தையும் இந்த காங்கிரஸ் அரசு சரியான முறையில் மக்களுக்கு கொண்டு செல்லவில்லை.

தூய்மை இந்தியா, கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், பிரதமர் அவாஸ் உள்ளிட்ட அனைத்து திட்டங்களை அமல்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது. மாநில அரசின் ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் கொடுக்காமல் எந்த பணியும் நடைபெறுவது இல்லை. பெங்களூரு மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஆட்சியாளர்கள் ‘கமிஷன்‘ பெறுகிறார்கள்.

பெங்களூருவில் சாலைகள் சரியாக இல்லை. சாலைகளை சீரமைக்க நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் சாலைகள் சீராகவில்லை. குத்தகைதாரர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு அந்த பணம் சென்றுவிட்டது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு இந்த அரசு தீர்வு காணவில்லை. இந்த காங்கிரஸ் அரசை அகற்ற மக்கள் தயாராக வேண்டும்.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மத்திய மந்திரி அனந்தகுமார் கூறியதாவது:-

கர்நாடகத்தில் குண்டர்களின் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நேரம் வந்துவிட்டது. இந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக வேண்டும். மக்களுக்கு நல்லாட்சியை கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். இதற்கு முகமது நலபட், நாராயணசாமி ஆகியோரின் சம்பவங்கள் உதாரணம் ஆகும். இன்னும் இதுபோன்ற நிறைய சம்பவங்கள் வெளியே வரவில்லை.

முகமது நலபட் சம்பவத்தால் பெங்களூரு நகரின் மரியாதை போய்விட்டது. மத்தியில் பிரதமர் மோடி உலகமே பாராட்டும் வகையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறார். ஆனால் சித்தராமையா தனது பின்னால் குண்டர்களை வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துகிறார். பெங்களூரு நகர மக்கள் எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சியை மன்னிக்கக்கூடாது. நகரில் குப்பைகளை சரியாக அகற்றுவது இல்லை. அதனால் பெங்களூரு குப்பை நகரமாக மாறிவிட்டது. மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.

இவ்வாறு அனந்தகுமார் கூறினார்.

இந்த நடைபயணத்தால் எம்.ஜி.ரோடு உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. வாகன ஓட்டிகள் தவிப்புக்கு ஆளாயினர். பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளிலும் இத்தகைய நடைபயணத்தை நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்