விண்வெளி விஞ்ஞானத்தை உயிர்ப்பித்தவர்!

விண்வெளி விஞ்ஞானத்தின் விடிவெள்ளியாக விளங்கியவர் கலீலியோ கலிலி.

Update: 2018-03-02 06:01 GMT
 மதங்கள் பூமியை மையப்படுத்திய கொள்கைகளை மக்களிடம் போதித்துக் கொண்டிருந்த காலத்தில், கலீலியோ சூரியனை மையமாக வைத்து மற்ற கோள்கள் சுற்றுகின்றன என்ற உண்மையை உரக்கக்கூறி, அந்த எதிர்ப்பால் இறுதிவரை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இறந்தவர்.

இவர் 15-2-1564-ல் இத்தாலியின் பைசா நகரில் பிறந்தார். சிறு வயது முதலே தன் அறிவாற்றலால் அனைவரையும் கவர்ந்தார். தான் பார்க்கும் அனைத்து எந்திரங்கை-ளுயம் பிரித்து மீண்டும் அதை முன்பிருந்தபடி பொருத்திவிடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

புளோரன்ஸ் நகரில் குருகுல வழியில் பள்ளிக்கல்வி பயின்றார். தன் பதினெட்டாம் வயதில் கல்லூரிப் படிப்பை பைசாநகர் பல்கலைக்கழகத்தில் முடித்தார். கல்லூரிப் படிப்பில், தான் சேகரித்த விஷயங்களைக்கொண்டு யோசித்து தொலைநோக்கி ஒன்றை வடிவமைத்தார் கலீலியோ. அதைக் கொண்டு வானத்தைப் பார்த்த கலீலியோ பல வியப்பான காட்சிகளைக் கண்டார். அந்த ஆச்சரியமான காட்சிகள் அவரை விண்வெளியை உற்று ஆராயத் தூண்டியது. தொடர்ந்து விண்வெளியை நோக்கி பல உண்மைகளை கண்டறிந்தார். நிலவில் உள்ள மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் கண்டு வியந்து உலகிற்கு காட்டினார். அத்துடன் பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றிக் கொண்டிருப்பதையும், பூமியை சூரியன் சுற்றிவரவில்லை என்றும், மாறாக பூமியே சூரியனை சுற்றி வருவதையும் கண்டுபிடித்துக் கூறினார்.

அதுவரை ‘பிரபஞ்சத்துக்கே பூமிதான் மையப்புள்ளி, எல்லாமே பூமியைத்தான் சுற்றுகிறது’ என்று நம்பப்பட்டு வந்தது. மதவாதிகளும் இந்தக் கருத்தையே பரப்பி வந்தனர். ஆனால் உண்மை இதற்கு மாறாக இருந்ததால் கலீலியோ தனது கருத்துகளை புத்தகமாக எழுதி வெளியிட்டார். இது மதகுருக்களுக்கு கோபத்தை வரவழைத்தது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் அவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். மத நம்பிக்கைகளுக்கு விரோதமாக பேசுவதாக குற்றம் சாட்டினார்கள். “பூமிதான் யையப்புள்ளி. சூரியன் உள்பட எல்லாமே பூமியைத்தான் சுற்றுகிறது. பூமி நிலையானது” என்று கட்டாயப்படுத்தி சொல்ல வைத்தார்கள். அவர்களின் வற்புறுத்தலால் அப்படி சொல்லிவிட்டு வெளியே வரும்போது, “இன்னமும் நான் நம்புகிறேன் பூமி சுற்றுகிறது” என்று முணுமுணுத்தாராம் கலீலியோ. பின்னர் அவர் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் இதய பாதிப்பு ஏற்பட்டு 1642-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி தன் 77-ம் வயதில் கலீலியோ இறந்தார்.

ஊசல் விதி, அலைக் கோட்பாடு, சூரிய மையக் கோட்பாடு, வியாழன் கிரகத்தின் 4 துணைக் கோள்கள் உள்பட பல கண்டுபிடிப்புகளை கலீலியோ நிகழ்த்தினார். விஞ்ஞான உலகம் அவருடைய கண்டுபுடிப்புகளால் பரபரப்பு அடைந்தது. “துணைக்கோள்கள் சுற்றுவதற்கும் ஏதோ காரணம் இருக்கிறது. பூயில் இருந்து மேலே தூக்கி வீசுகிற பொருள்கள் எல்லாமே திரும்பவும் வந்து பூமியில் விழுந்துவிடுகின்றன. ஆனால், அந்தரத்தில் இருக்கிற நட்சத்திரங்கள், கோள்கள் எந்த ஆதரவும் இல்லாமல் அப்படியே சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அவை வேறு எங்கும் போய் விழுந்துவிடவில்லை. இதற்கு என்ன காரணம்? என்பது பற்றிய விஞ்ஞானத் தேடலை முடுக்கிவிட்டது கலீலியோவின் ஆராய்ச்சிகள்.

அவருக்குப் பின்னால் வந்த இயற்பியல், வானியல் விஞ்ஞானிகள் கலீலியோவின் ஆராய்ச்சியைத் பின்தொடர்ந்து பல உண்மைகளை கண்டுபிடித்துக் கூறினர். நியூட்டன் தொலைநோக்கியை மேம்படுத்தி புவிஈர்ப்புவிசை உள்ளிட்ட பல்வேறு உண்மைகளை கண்டுபிடித்தார். கோகள்கள் அந்தரத்தில் மிதப்பதற்கான காரணங்களையும் பின்னால் வந்த விஞ்ஞானிகள் ஆய்ந்தறிந்து கூறினார்கள். விண்வெளி விஞ்ஞான வரலாற்றில் கலீலியோவுக்கு என்றும் நீங்காத இடம் உண்டு.

மேலும் செய்திகள்