ஆட்சியை பிடிக்க ‘ஊழல்’ துருப்புச்சீட்டு? பரஸ்பர குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் பா.ஜனதா- காங்கிரஸ்

கர்நாடக சட்ட சபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க பா.ஜனதா கட்சி வியூகங்கள் வகுத்து களப்பணியாற்றி வருகிறது.

Update: 2018-03-01 22:35 GMT
ர்நாடக சட்ட சபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க பா.ஜனதா கட்சி வியூகங்கள் வகுத்து களப்பணியாற்றி வருகிறது. குறிப்பாக அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது ஆளும் காங்கிரஸ் கட்சியை, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் கடந்த வாரம் மைசூருவில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 10 சதவீத கமிஷன் ஆட்சி மாநிலத்தில் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கர்நாடகத்துக்கு தேவைப்படுவது வளர்ச்சியை தரும் ஆட்சி தான் எனவும், கமிஷன் ஆட்சி இல்லை எனவும் பேசினார். இதற்கு சட்டசபையில் பதில் அளித்த முதல்-மந்திரி சித்தராமையா, மத்தியில் நடந்து வருவது 90 சதவீத கமிஷன் ஆட்சி என பா.ஜனதா மீது எதிர் தாக்குதல் தொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மும்பை-கர்நாடக பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஊழல் குறித்து பேசும் பிரதமர் மோடி, லோக்பாலை அமைக்காதது ஏன்? மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு ஆதரவாக உள்ள தொழில் அதிபர்களின் சொத்து மதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்தது எப்படி?, வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ்மோடி உள்ளிட்டோரை பற்றி நாட்டை பாதுகாப்பதாக சொல்லும் மோடி பேசாதது ஏன்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மோடி, 48 வருட காங்கிரஸ் ஆட்சியை, 48 மாத பா.ஜனதா ஆட்சியிடம் ஒப்பிட தயாரா? என சவால் விட்டு உள்ளார். மேலும் இன்னும் சில மாதங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமாக புதுச்சேரி தான் இருக்கும் என கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பேசினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசி உள்ள சித்தராமையா, ஊழல் செய்த முன்னாள்-முதல் மந்திரி எடியூரப்பாவை தனது அருகில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் எங்களை ஊழல்வாதி என கூறுவது நகைப்புக்குரியது என்று கிண்டலடித்த அவர், எங்கள் ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தயாரா? எனவும் சவால் விடுத்து உள்ளார்.

இவ்வாறு சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் ‘ஊழலை’ மையமாக வைத்து பரஸ்பர குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். வருகிற சட்டசபை தேர்தலில் ‘ஊழல்’ என்ற வார்த்தை தான் ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகளுக்கு துருப்பு சீட்டாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மேலும் செய்திகள்