அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாட்டில் மாற்றம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுவின் செயல்பாட்டிலும், குழு உறுப்பினர்களுக்கு அளிக்கும் பயிற்சியிலும் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Update: 2018-03-01 22:00 GMT
தேனி,

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. இந்த குழுவில் ஒரு ஆசிரியர், மாற்றுத்திறனாளி மாணவர் அல்லது மாணவியின் பெற்றோர் ஒருவர், நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர் 2 பேர், பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுவார் கள்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால், குழுவில் இடம்பெற்று இருந்த முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதியே தொடர்ந்து உறுப்பினராக செயல்படுவார். இந்த பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தற்போது இந்த பயிற்சி நடைமுறை மற்றும் குழுவின் செயல்பாட்டில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

அதன்படி ஒரு நாள் பயிற்சி மட்டும் அளிக்கப்பட உள்ளது. மற்ற 2 நாட்களும், பொதுமக்கள் பங்கேற்புடன் சிறப்பு கூட்டம், சமூக தணிக்கை செய்தல் போன்றவற்றுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய முயற்சி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டத்தில் 531 பள்ளிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 186 பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு 80 கருத்தாய்வு மையங்களில் 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முன்னதாக உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட உள்ளது.

ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் நடக்கிறது. இதற்காக மாநில அளவிலான பயிற்சியில் பங்கேற்ற கருத்தாளர்கள் 3 பேர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

கல்வி உரிமை, குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம், பாலியல் பாகுபாடு, பேரிடர் மேலாண்மை, பள்ளி மேம்பாட்டு திட்ட வரைவு தயாரித்தல், உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு, கற்றல் விளைவு போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இத்தகவலை அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்