பெங்களூருவில் பயங்கரம் வீடு புகுந்து 2 பெண்கள் படுகொலை கொலையாளிகளை போலீஸ் தேடுகிறது

பெங்களூருவில், வீடு புகுந்து 2 பெண்களை படுகொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-03-01 22:30 GMT
பெங்களூரு,

பெங்களூருவில், வீடு புகுந்து 2 பெண்களை படுகொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை

பெங்களூரு பேட்ராயனபுராவில் உள்ள கஸ்தூரிபா நகர் 5-வது கிராஸ், 6-வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சிவராம். இவர் நாயண்டஹள்ளியில் உள்ள ‘பிளைவுட்‘ தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா(வயது 26). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று வழக்கம்போல் சிவராம் வேலைக்கு சென்றுவிட்டார். இந்த தம்பதியின் 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்றனர். இதனால், கவிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த வேளையில், வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் கத்தியால் கவிதாவின் கழுத்தை அறுத்துள்ளனர். இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து துடிதுடித்து இறந்தார். இந்த வேளையில், மர்மநபர்கள் அவருடைய வீட்டில் இருந்த தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

இதற்கிடையே, வீட்டுக்கு கவிதாவின் தந்தை வந்துள்ளார். அப்போது, கவிதா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். தகவல் அறிந்தவுடன் பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.கே.சிங், பேட்ராயனபுரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும், கவிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பேட்ராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

இதேபோல், பெங்களூரு தாவரகெரே மெயின் ரோடு பி.டி.எம். 1-வது ஸ்டேஜ் குடிசை மாற்று குடியிருப்பில் ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கமலம்மா(55) வசித்து வந்தார். ஜெகதீசின் வீட்டில் அவர் ஒப்பந்த அடிப்படையில் தங்கியிருந்தார். கமலம்மா, துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், திடீரென்று ஜெகதீஷ், தனது வீட்டில் இருந்து கமலம்மாவை வெளியேறும்படி கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெகதீஷ் தனது 2 கூட்டாளிகளுடன் அங்கு வந்துள்ளார்.

அப்போது, கமலம்மா தனது மகளுடன் வீட்டில் இருந்துள்ளார். இந்த வேளையில், கமலம்மாவின் மகளை வெளியே இருக்கும்படி கூறிய ஜெகதீஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கமலம்மாவை கத்தியால் குத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார். இதற்கிடையே, வீட்டுக்குள் வந்த மகள் தனது தாய் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை பார்த்து கூச் சலிட்டார். அந்த சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கமலம்மாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷ் உள்பட 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்