கூடலூர் அருகே புடலங்காய் விளைச்சல் அமோகம்

கூடலூர் அருகே புடலங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. ஒரு கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2018-03-01 22:00 GMT
கூடலூர்,

கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான ஏகலூத்து, மந்தைவாய்க்கால், கழுதைமேடு, சரித்திரவு உள்ளிட்ட பகுதிகளில் பந்தல் அமைத்து பாகற்காய், கோவக்காய், புடலங்காய் ஆகிய காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதில் புடலங்காய் குறுகிய காலத்தில் பயன் தரக்கூடியதாகும்.

பயிரிட்ட நாளில் இருந்து, 25 நாட்களுக்குள் மகசூல் கிடைக்கும். வாரத்துக்கு ஒருமுறை காய்களை அறுவடை செய்யலாம். தற்போது கூடலூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் புடலங்காய் அமோகமாக விளைந்துள்ளது. அந்த காய்களை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புடலங்காய்களை உள்ளூர் வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார் கள்.

கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாரச்சந்தைகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். பெரும்பான்மையான தோட்டங்களில் வியாபாரிகள் ஒப்பந்த அடிப்படையில் பணத்தை கொடுத்து விட்டு புடலங்காய்களை வாங்கி செல்கிறார்கள்.

குறிப்பாக இங்கு அறுவடை செய்த புடலங்காய்களை மினி லாரிகளில் ஏற்றி கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்கின்றனர். விளைச்சல் அதிகரித்திருப்பதன் காரணமாக புடலங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரை மட்டுமே புடலங்காய் காய்ப்பு சீசன் ஆகும்.

மகசூல் அதிகமாக இருப்பதால், திராட்சை கொடியை அகற்றி விட்டு புடலங்காய் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வந்துள்ளனர். குறைந்த நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் புடலங்காய் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்