பெங்களூரு மக்களை பா.ஜனதாவினரிடம் இருந்து தான் பாதுகாக்க வேண்டும் மந்திரி ராமலிங்கரெட்டி பேட்டி

சட்டசபை தேர்தலுக்காக பாதயாத்திரை செல்லும் பா.ஜனதாவினரிடம் இருந்து தான் பெங்களூரு மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மந்திரி ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார்.;

Update: 2018-03-01 22:15 GMT
பெங்களூரு,

சட்டசபை தேர்தலுக்காக பாதயாத்திரை செல்லும் பா.ஜனதாவினரிடம் இருந்து தான் பெங்களூரு மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மந்திரி ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்கு நன்கு தெரியும்


பெங்களூருவை காங்கிரஸ் கட்சியினர் கொள்ளையடித்து விட்டதாகவும், அதனால் பெங்களூருவை பாதுகாப்போம் என்று வலியுறுத்தி பாதயாத்திரை செல்ல இருப்பதாகவும் பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். உண்மையில் பெங்களூரு நகரை கொள்ளையடித்தவர்கள், மாநகராட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள் பா.ஜனதாவினர்தான் என்று மக்களுக்கு நன்கு தெரியும். பா.ஜனதாவினர் ஆட்சியில் தான் பெங்களூருவில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. அவர்கள் மாநகராட்சிக்கு சொந்தமான சொத்தை கூட அடமானம் வைத்து பல கோடி ரூபாய் ஊழல் செய்தார்கள்.

பாதயாத்திரை செல்வதால் பா.ஜனதாவுக்கு எந்த லாபமும் கிடைக்க போவதில்லை என்று, அவர்களுக்கே நன்கு தெரியும். மக்களுக்கும் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. பெங்களூரு மாநகராட்சி பா.ஜனதா வசம் இருந்தபோது ரூ.8 ஆயிரம் கோடி கடன் காரணமாக மாநகராட்சி நிர்வாகமே முடங்கியது. அவர்களால் பெங்களூருவை எப்படி பாதுகாக்க முடியும்?. பா.ஜனதாவினரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை காங்கிரசுக்கு இல்லை.

பா.ஜனதாவினரிடம் இருந்து தான்...

பா.ஜனதாவினரிடம் இருந்து தான் பெங்களூரு நகர மக்களை காப்பாற்ற வேண்டும். எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷ், வினய் என்பவரை கடத்த முயன்றதுடன், அவரை தாக்கவில்லையா?. ஹாரீஸ் எம்.எல்.ஏ. மகன் பிரச்சினையில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரியை மிரட்டிய வழக்கில் நாராயணசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், எங்கள் கட்சியை சேர்ந்தவர்களை பாதுகாக்க நினைக்கவில்லை.

தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை பாதுகாக்க வேண்டும் என்று திடீரென்று பா.ஜனதாவினருக்கு ஞான உதயம் ஏற்பட்டது ஏன்?, இத்தனை நாட்கள் ஏன் அவர்கள் பெங்களூருவை பாதுகாக்க நினைக்கவில்லை. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜனதாவினர் பாதயாத்திரை செல்கிறார்கள். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

மேலும் செய்திகள்