மாவட்டம் முழுவதும், பிளஸ்-2 பொதுத்தேர்வை 14,759 மாணவ, மாணவிகள் எழுதினர்

மாவட்டம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை 14 ஆயிரத்து 759 மாணவ, மாணவிகள் எழுதினர். 108 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2018-03-01 22:00 GMT
தேனி,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வரத்தொடங்கி விட்டனர். தேர்வு மைய வளாகத்தில் அமர்ந்து கடைசி நேர படிப்பில் தீவிர கவனம் செலுத்தினர். ஒருவருக்கு ஒருவர் கேள்விக்கான பதில்களை ஒப்பித்து சரிபார்த்து கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் 128 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுத அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 50 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 14 ஆயிரத்து 759 பேர் தேர்வு எழுதினர். 108 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 68 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 79 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதில் 8 ஆயிரத்து 17 பேர் தேர்வு எழுதினர். 62 பேர் தேர்வு எழுத வரவில்லை. உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 60 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 788 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 6 ஆயிரத்து 742 பேர் தேர்வு எழுதினர். 46 பேர் தேர்வு எழுத வரவில்லை.தேர்வில் முறைகேடு நடக்காமல் தடுக்க 5 பறக்கும் படையினர், 33 நகரும் படையினர் (மொபைல் குழு) அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். மேலும், சின்னமனூர், தேனி பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வு மையங் களில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினரும் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.

பெரும்பாலான பள்ளிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளை, ஆசிரியர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்த காட்சியையும் பார்க்க முடிந்தது.

மேலும் செய்திகள்