அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வினை 8 ஆயிரத்து 324 மாணவ-மாணவிகள் எழுதினர்

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வினை 8 ஆயிரத்து 324 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 69 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2018-03-01 22:15 GMT
தாமரைக்குளம்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் 30 மையங்களில் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 7 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அப்போது சில பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு பேனா உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி வாழ்த்து கூறி தேர்வு மையத்தில் விட்டு விட்டு சென்றதையும் காண முடிந்தது. பின்னர் மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து படித்ததை கடைசியாக ஒரு முறை திருப்பி பார்த்தனர். பின்னர் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அதில் தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர். தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் 3,857 மாணவர்களும், 4,536 மாணவிகளும் என 8,393 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் முதல் தாள் தேர்வில் 8,324 பேர் கலந்து கொண்டு எழுதினர். 69 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. தேர்வெழுத தகுதி பெற்றிருந்த 90 தனித்தேர்வர்களில் 12 பேர் தேர்வுக்கு வரவில்லை.

அரியலூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 30 தலைமை ஆசிரியர்களும் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் 3 துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களாக 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 480 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் தேர்வு மையத்திற்கு 9 வழித்தடங்களில் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 9 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்- வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 70 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணித்தனர். எனினும் தமிழ் முதல் தாள் என்பதால் எவ்வித ஒழுங்கீன செயலிலும் ஈடுபட்டதாக மாணவர்கள் பிடிபடவில்லை. 3 மணி நேரம் நடந்த தமிழ் முதல் தாள் தேர்வு சரியாக 1.15 மணியளவில் நிறைவடைந்தது.

விடைத்தாளை அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்த மாணவர்கள் தங்களது சந்தேகங்களை ஆசிரிய, ஆசிரியைகளிடம் கேட்டு தெளிவுபடுத்தினர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியாக ஆசிரிய-ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி கொடுத்தனர். அவர்களுக்கு கூடுதலாக 1 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் 2-ம் தாளுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது.

மேலும் செய்திகள்