குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழா குதிரை சிலைக்கு மலைபோல் மாலைகள் குவிந்தன

குளமங்கலம் பெருங் காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக திருவிழா நடந்தது. இதில் கோவிலில் உள்ள குதிரை சிலைக்கு மலைபோல் மாலைகள் குவிந்தன.;

Update: 2018-03-01 22:00 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங் கலம் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பு 33 அடி உயரத்தில் குதிரை சிலை உள்ளது. இக்கோவில் மாசிமக திருவிழா நேற்று நடை பெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் அணிவிப்பது தான். இந்நிலையில் பக்தர்கள் காகிதப்பூ மாலைகளை லாரி,வேன் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று குதிரை சிலைக்கு அணிவித்தனர். மேலும் பழங்களால் கட்டப்பட்ட மாலையும், பூ மாலையும் அணிவிக்கப்பட்டது.பக்தர்கள் சிலர் மாலைகளை மங்கள இசை வாத்தியங்களுடன் தலையில் சுமந்து வந்தனர். விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் நடந்து வந்தும், மாட்டு வண்டிகளில் வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக கீரமங்கலம், அறந்தாங்கி, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், கொத்தமங்கலம், ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. பக்தர்களுக்காக மருத்துவ வசதியும் செய்யப்பட்டிருந்தது.கீரமங்கலம் போலீசார் மற்றும் ஊர்க் காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. விழாவில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

மணமேல்குடி அருகே வடக்கம்மாபட்டினம் கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி திருவிழா கடந்த மாதம் 20-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து தொடர்ச்சியாக தினமும் பாலதண்டா யுதபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்குளம் சிவன் கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது.தொடர்ந்து திருக்குளக்கரையில் சிவாச் சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்