ரேஷன் கடைகளை பூட்டிய அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. மீது வழக்கு

ரேஷன் கடைகளை பூட்டிய என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து மீது 2 போலீஸ் நிலையங்களில் 3 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2018-03-01 22:15 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு மாதந்தோறும் இலவச அரிசி மற்றும் பண்டிகை காலங்களில் இலவச துணிகள் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வசதி படைத்த பலர் சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் வாங்கி வைத்திருப்பதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

அதன்படி குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தினர். இதில் சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பலர் வசதி படைத்தவர்களாக கணக்கிடப்பட்டது. அவர்கள் இலவச அரிசி வாங்க தகுதி இல்லாதவர்கள் என கணக்கிட்டு சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை நீக்கம் செய்து விட்டு மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளாக மாற்றுவதாக ரேஷன்கடைகளின் முன்பு அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்தது.

இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொகுதி மக்கள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்துவிடம் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள சில ரேஷன் கடைகளின் கதவை மூடி போராட்டம் நடத்தினார்கள்.

இந்தநிலையில் புதுச்சேரி நியாய விலைக்கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகி ஜோதிராஜ் கோரிமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள 11 கடைகளிலும், லாஸ்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2 கடைகளிலும் என மொத்தம் 13 கடைகளில் பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கோரிமேடு மற்றும் லாஸ்பேட்டை போலீஸ் நிலையங்களில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து மீது 3 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்