ஈரோடு வந்த ரெயிலின் கழிவறையில் வீசப்பட்ட ஆண் குழந்தை

ஈரோடு வந்த ரெயிலின் கழிவறையில் ஆண் குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-03-01 23:30 GMT
ஈரோடு,

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடை பகுதிக்கு நேற்று காலை 5.45 மணிக்கு வந்தது. அப்போது அந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் கழிவறைக்கு செல்வதற்காக கதவை திறந்துள்ளார்.

அங்கு பார்த்த காட்சி அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதற்கு காரணம் கழிவறையில் ஒரு பிளாஸ்டிக் கவரை விரித்து அதில் ஒரு ஆண் குழந்தை படுக்க வைக்கப்பட்டு இருந்தது தான். இந்த தகவல் அந்த ரெயிலின் பொதுப்பெட்டி முழுவதும் பரவியது.

இதனால் அனைத்து பயணிகளும் அந்த குழந்தையை பார்க்க ஆர்வம் காட்டினர். அதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பயணிகள் இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் கழிவறையில் அழுது கொண்டு இருந்த ஆண் குழந்தையை மீட்டனர். இதுபற்றி ரெயில் பயணிகளிடம் குழந்தையுடன் வந்த பெண் யார்? என கேட்டு விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையை தேடி யாராவது வருவார்களா? என்று சிறிது நேரம் காத்திருந்தனர். ஆனால் யாரும் அந்த குழந்தையை சொந்தம் கொண்டாடி வரவில்லை. எனவே யாரோ அந்த குழந்தையை கழிவறையில் போட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதற்கிடையே அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து காரைக்காலுக்கு புறப்பட்டு சென்றது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஈரோடு சைல்டு லைன் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அமைப்பினர் குழந்தையை பத்திரமாக பராமரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெயில் கழிவறையில் குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயில் கழிவறையில் குழந்தை கிடந்ததை பார்த்த பயணிகள், எப்படித்தான் பெற்ற குழந்தையை இப்படி கழிவறையில் வீசிச்செல்ல மனம் வருகிறதோ? அந்த கல்நெஞ்சம் கொண்ட தாய் யாராக இருக்கக்கூடும் என்று முனங்கியபடி சென்றதை கேட்க முடிந்தது.

மேலும் செய்திகள்