ரெயில்வே லெவல் கிராசிங்குகளை நிரந்தரமாக மூடக்கூடாது

விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு மற்றும் மாத்துநாயக்கன்பட்டி கிராமங்களில் ரெயில்வே லெவல் கிராசிங்குகளை நிரந்தரமாக மூடக்கூடாது என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-03-01 22:30 GMT
விருதுநகர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தி.மு.க., புதிய தமிழகம் ஆகிய கட்சி பிரதிநிதிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில் பாதையில் கூரைக்குண்டு, மாத்துநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் ரெயில்வே லெவல் கிராசிங்குகள் உள்ளன. இந்த லெவல் கிராசிங்குகளை மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தங்கள் ஆட்சேபனையை மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளனர்.

மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா, கிராம மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் ஆள் இல்லாத ரெயில்வே லெவல் கிராசிங்குகளில் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விபத்துக்கள் அதிகம் ஏற்படும் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கவும், சில இடங்களில் தற்காலிகமாக ஆட்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் கூரைக்குண்டு மற்றும் மாத்துநாயக்கன்பட்டி கிராமங்களில் உள்ள லெவல் கிராசிங்குகளை மூடாமல் தற்போது உள்ள படி செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இந்த லெவல் கிராசிங்குகள் நிரந்தரமாக மூடப்பட்டால் இந்த கிராமங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும், கிராம மக்கள் விவசாயம் மற்றும் தீப்பெட்டி ஆலைகளுக்கு வேலைக்கு செல்வதற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். மேலும் கிராமங்களில் இருந்து அவசர மருத்துவ சிகிச்சைக்கும் நகர் பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

எனவே இந்த சூழ்நிலையில் இந்த கிராமங்களில் உள்ள லெவல் கிராசிங்குகளை மூட கூடாது என்றும், தொடர்ந்து கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தற்போது உள்ளபடி இந்த லெவல் கிராசிங்குகள் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்.

முன்னதாக கிராமமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்