37,963 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினர் தமிழ் முதல்தாள் எளிதாக இருந்ததாக மாணவிகள் பேட்டி

நெல்லை மாவட்டத்தில் 37 ஆயிரத்து 963 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். தமிழ் முதல்தாள் எளிதாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

Update: 2018-03-01 21:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 37 ஆயிரத்து 963 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். தமிழ் முதல்தாள் எளிதாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 தேர்வு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வு எழுத 123 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 518 மாணவ-மாணவிகளும், தென்காசி கல்வி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 521 மாணவ-மாணவிகளும், நெல்லை கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 924 மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினர். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 37 ஆயிரத்து 963 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 16 ஆயிரத்து 366 மாணவர்கள் ஆவார்கள். 21 ஆயிரத்து 597 மாணவிகள் ஆவார்கள். 124 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளும் எழுதினார்கள். அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 15 மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினார்கள். பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் 8 கைதிகள், சென்னை புழல் சிறையில் தேர்வு எழுதினார்கள்.

கலெக்டர் ஆய்வு

தேர்வை கண்காணிக்க 123 முதன்மை கண்காணிப்பாளர்கள், 20 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 123 துறை அலுவலர்கள், 2 ஆயிரத்து 148 அறை கண்காணிப்பாளர்கள், 232 நிலையான பறக்கும்படை உறுப்பினர்கள், கல்வித்துறை ஆய்வு அலுவலர்கள் தலைமையில் 8 பறக்கும் படை குழுக்கள், 25 வழித்தட அலுவலர்கள் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம், நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் தேவபிச்சை மற்றும் கல்வி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடந்தது. தேர்வு எழுதி விட்டு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வெளியே வந்தனர்.

எளிதாக இருந்தது

தேர்வு பற்றி மாணவிகள் மகாலட்சுமி, கிருஷ்ணவேணி, ரம்யா, நம்பிநாச்சியார் ஆகிய மாணவிகள் கூறும் போது, “தமிழ் முதல்தாள் எளிதாக இருந்தது. தினமும் ஆசிரியர்கள் வழிகாட்டுதலின் படி பாடங்கள் படித்து வந்தோம். எந்தந்த பாடத்தில் இருந்து எப்படி கேள்விகள் வரும் என ஆசிரியர்கள் கூறி இருந்தனர். அதன்படி நாங்கள் படித்தோம். நாங்கள் படித்த பாடங்களில் இருந்து கேள்வி வந்து இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது“ என்றனர்.

தேர்வு மையங்களுக்கு குடிநீர், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்