போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் பலி

மதுரையில் ரவுடிகளை பிடிக்கச் சென்றபோது போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். இன்னொரு ரவுடி காயத்துடன் தப்பி ஓடி விட்டான்.;

Update: 2018-03-01 23:45 GMT
மதுரை,

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவராக இருந்தவர், ராஜபாண்டி (அ.தி.மு.க.). அதேபோல, தி.மு.க. ஆட்சி காலத்தில் மண்டலத்தலைவராக இருந்தவர் வி.கே.குருசாமி. இவர்கள் மதுரை காமராஜர்புரம் பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கிடையே, பல வருடங்களாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக இருதரப்பை சேர்ந்த ஆதரவாளர்களும் அடிக்கடி மாறி, மாறி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பழிக்குப்பழியாக 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.

இதன் காரணமாக, இருதரப்பை சேர்ந்தவர்களும் மதுரை மட்டுமின்றி பல இடங்களில் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் ராஜபாண்டியின் கூட்டாளிகள் 5 பேர் மதுரை சிக்கந்தர்சாவடி, மந்தையம்மன் கோவில் தெற்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக, மதுரை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவர்களை பிடிப்பதற்காக சிக்கந்தர்சாவடியில் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் உள்ளே வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டினார்கள். உடனே போலீசார் வீட்டின் உள்ளே புகுந்த போது, ரவுடிக்கும்பல் கள்ளத்துப்பாக்கியால் சுட முயன்றது.

அப்போது போலீசார் தங்களை காத்துக் கொள்ள துப்பாக்கியால் ரவுடிகளை சுட்டனர். இதில் 2 ரவுடிகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

1) கார்த்திக் என்ற சகுனி கார்த்திக் (வயது 28), மதுரை காமராஜர்புரம் வைத்தியநாத அய்யர் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன்.

2) மந்திரி என்கிற முத்து இருளாண்டி(30), மதுரை வரிச்சியூர் பொட்டப்பனையூரை சேர்ந்த இருளாண்டி மகன்.

சம்பவ இடத்தில் இருந்து முத்து இருளாண்டியின் மனைவி முத்துலெட்சுமி (24), அவருடைய உறவினர் முனியசாமி ஆகியோர் தப்ப முயன்றனர். துப்பாக்கிமுனையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் இன்னொரு ரவுடியான மாயக்கண்ணன் என்பவன் காயத்துடன் தப்பி ஓடி விட்டான். அவனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ரவுடிகள் நடத்திய தாக்குதலில் செல்லூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பாலமுருகன் என்பவர் காயம் அடைந்தார். அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலையில் போலீசார் நடத்திய இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சிக்கந்தர்சாவடியை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றமாக இருந்தது. அந்தப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சினார்கள். போலீசார் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் உடல்களும் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்