சமுதாய பணியை ஊக்குவித்த ஜெயேந்திரர்

வேத பரிபாலனம் என்பதுவே பிரதானமாக வாழ்ந்தவர் காஞ்சி மகா பெரியவர்.

Update: 2018-03-01 06:24 GMT
ஞானத்தின் உச்சியில் தவத்தின் வலிமையில் அற்புதங்கள் நிகழ்த்தியவர். 1948-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட்ட போது, தடை நீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மகா பெரியவர்.

பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திரர் பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற காலத்தில் தமிழகத்தின் சூழ்நிலையில் மாற்றம் நிகழ்ந்தது. ஒரு புறத்தில் கடவுள் மறுப்பு அமைப்புகள், மறு புறத்தில் ஒட்டுமொத்த மத மாற்றங்கள். இந்தச் சூழ்நிலையில் மடாதிபதியாக இருப்பவரும் கூடக் களம் இறங்க வேண்டும் என்பது தான் காலாசாரம். கால ஆச்சாரம். அதை மிகச் சிறப்பாகச் செய்தவர் பெரியவர்.

இந்து சமுதாயத்தை சாதியப் பிரிவினைகள் பலவீனமாக்குகின்றன என்பதை உணர்ந்து, மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை முன்னெடுத்தவர். குடிசைப் பகுதிகளுக்கு, தலித் சமுதாயத்தினர் என்று தற்போது அழைக்கப்படும் திருக்குலத்தோர் வாழும் பகுதிகளுக்கு தாமே நேரடியாக வந்து ஆசி வழங்கியவர்.

காஞ்சி மடத்திற்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தான் செல்ல முடியும் என்ற தவறான கருத்தை மாற்றி, இந்து சமுதாயத்தை சேர்ந்த, இந்து சமுதாயத்தைச் சேராதவர்களும் கூட மடத்திற்கு வந்து பெரியவரைச் சந்தித்து ஆசி பெற முடியும் என்ற நிலையை உண்டாக்கிக் காட்டியவர் அவர்.

தமிழ்நாட்டில் சவாலாக இருந்த ஒரு சூழ்நிலையை சமாளிக்க பல இந்து இயக்கங்கள் பாடுபட்டன என்பது உண்மை. ஆனால் அதன் பின்னணியில் தமது தவ வலிமையால் ஊக்கம் தந்த பெருமை யாருக்கேனும் உண்டென்றால், அது பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைதான் சாரும்.

இவரது முயற்சியாலேயே தமிழ் இலக்கியங்களைப் பயிற்றுவிப்பதற்காக சென்னையிலேயே கூட சேத்துப்பட்டு சங்கர மடத்தில் தமிழ் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஜனகல்யாண் அமைப்பின் மூலம் தொண்டு புரியும் எண்ணத்தை எல்லோர் மனத்திலும் விதைத்தவர் இவர். இன்றும் கூட காஞ்சீபுரத்தில் ஜனகல்யாண் பெயர் போட்ட ரிக்‌ஷாக்களைப் பார்க்கலாம். ஏராளமான தொண்டு நிறுவனங்களை ஏற்படுத்தி, பல்வேறு சேவைக் காரியங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

மடாதிபதியாக இருந்து காலத்தின் தேவையை உணர்ந்து சமுதாய முன்னேற்றத்திற்கான சேவையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர், தம் வாழ்வின் கடைசிக் காலம் வரையில் உழைத்தவர் காஞ்சி பெரியவர் பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவர் இன்று (அதாவது நேற்று) சித்தி அடைந்தார். அவரது பிரிவு இந்து சமுதாயத்திற்குப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.

நானும், எங்கள் குடும்பத்தினரும் கூட காஞ்சி மடத்தோடு எங்களை இணைத்துக் கொண்டவர்கள். தொடக்க நாள் முதல் அவரது பாதம் பணிந்து, அவருக்குதொண்டு செய்கின்ற, பேசுகின்ற, பழகுகின்ற, அவரிடத்தில் அறிவுரை கேட்கின்ற பாக்கியம் பெற்றவன் நான் என்பதில் எனக்குப் பெருமை. அந்த வகையில் இந்தச் செய்தி தனிப்பட்ட முறையிலும் எங்களுக்குப் பேரிழப்பு.

பாமரனுக்குத் செய்யும் தொண்டே பரமனுக்கு செய்யும் தொண்டு என்பது பழமொழி. இவர் பரமனுக்கும் தொண்டு செய்தார். பாமரனுக்கும் தொண்டு செய்தார்.

- இல.கணேசன், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்

மேலும் செய்திகள்