கனவு தேவதையை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம் முகத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம்

தங்களது கனவு தேவதை ஸ்ரீதேவியின் உடலை காண மும்பை செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் முன் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் அவரது முகத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2018-02-28 23:30 GMT
மும்பை,

தங்களது கனவு தேவதை ஸ்ரீதேவியின் உடலை காண மும்பை செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் முன் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் அவரது முகத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

நடிகை ஸ்ரீதேவி மரணம்

துபாயில் மரணம் அடைந்து 3 நாட்களுக்கு பிறகு மும்பை வந்தது, இந்திய திரையுலக கனவு தேவதை ஸ்ரீதேவியின் உடல். ஸ்ரீதேவியின் மரண செய்தி அவரது எண்ணற்ற ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனால் அவரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் அவரது மரண செய்தி வெளியான மறுநாளே அந்தேரியில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

இரவு வரையிலும் காத்து கிடந்தனர். ஆனால் அன்றைய தினம் ஸ்ரீதேவியின் உடல் வராததால் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

நேற்று ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டிருந்த செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் முன்பு அணி அணியாய் அவரது ரசிகர்கள் கூட்டம் திரண்டது. காலை 6 மணி முதலே கிளப் முன் திரள தொடங்கிவிட்டனர்.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த ரசிகர்களும், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ரசிகர்களும் அதிகளவில் வந்து குவிந்தனர்.

செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ள சாலை முழுவதும் ரசிகர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. செலிபிரேஷன் கிளப்புக்குள் செல்ல ரசிகர்களுக்கு என்று தனியாக பாதை ஒதுக்கப்பட்டு இருந்தது. நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு பிரபலங்கள் மட்டுமே அருகில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து சற்று தூரத்தில் இருந்தே அஞ்சலி செலுத்த ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

அந்த தூரத்தில் இருந்த ரசிகர்களால் கண்ணாடி பேழைக்குள் இருந்த ஸ்ரீதேவியின் முகத்தை பார்க்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அதிக நேரமாகி விட்டதால் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் அவர்கள் அஞ்சலி செலுத்த முடியாமல் சாலையிலேயே நிற்க வேண்டியதாயிற்று.

தடியடி

இதற்கிடையே ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த வரும் சினிமா நட்சத்திரங்களை பார்ப்பதற்கென்றும் தனி கூட்டம் திரள ஆரம்பித்து விட்டது. ஒருவருக்கொருவர் முண்டி அடித்துக்கொண்டு உள்ளே வர முயன்றனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு உண்டானது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். நிலைமையை சமாளிப்பதற்காக ரசிகர்கள் மீது போலீசார் அவ்வப்போது லேசான தடியடி நடத்தினர்.

மேலும் செய்திகள்