பெலகாவி அருகே ராகுல்காந்தி பயணத்தில் ‘மோடி வாழ்க’ என கோஷமிட்ட 2 பேர் மீது வழக்கு

பெலகாவி அருகே ராகுல்காந்தி சுற்றுப்பயணத்தில் ‘மோடி வாழ்க, மோடி வாழ்க’ என்று கோஷமிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2018-02-28 22:00 GMT
பெங்களூரு,

பெலகாவி அருகே ராகுல்காந்தி சுற்றுப்பயணத்தில் ‘மோடி வாழ்க, மோடி வாழ்க’ என்று கோஷமிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொப்பலில் பிரதமர் நரேந்திர மோடி பற்றி முகநூலில் அவதூறு பரப்பியவர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

2 பேர் மீது வழக்கு


கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மாநிலத்தில் 2-வது முறையாக 3 நாள் சுற்றுப்பயணம் செய்தார். இந்த சுற்றுப்பயணத்தின் இறுதிநாளான கடந்த 26-ந் தேதி ராகுல்காந்தி பெலகாவி மாவட்டம் குடச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு சவதத்திக்கு செல்வதற்காக ராமதுர்கா சங்கொள்ளி ராயண்ணா சர்க்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருந்த 2 பேர் ‘மோடி வாழ்க, மோடி வாழ்க’ என்று கோஷமிட்டனர். இதை அங்கு இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அங்கு இருந்த காங்கிரசார் ‘ராகுல்காந்தி வாழ்க, ராகுல்காந்தி வாழ்க’ என்று பதிலுக்கு கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தகராறு ஏற்படாமல் பார்த்து கொண்டனர். மேலும், ராகுல் காந்தி பயணத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சித்ததாக ‘மோடி வாழ்க, மோடி வாழ்க’ என்று கோஷங்கள் எழுப்பிய ரசூல் காஜி மற்றும் குமார இலிகேரா ஆகியோர் மீது ராமதுர்கா போலீசில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நரேந்திர மோடி பற்றி அவதூறு

இதேபோல், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா உஸ்கேரா கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் நாயக். இவர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து தனது முகநூலில் (பேஸ்புக்) அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. அதாவது, ‘சித்தராமையாவின் அரசை 10 சதவீத கமிஷன் அரசு என்று ஆதாரமில்லாமல் விமர்சிப்பது சரியில்லை. இது உங்களின் பதவிக்கு அழகு இல்லை’ என குறிப்பிட்டு இருந்த அவர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகவும் சில தகவல்களை பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து பா.ஜனதா சார்பில் கங்காவதி புறநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், பிரசாந்த் நாயக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்