கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 4.96 கோடி பேர் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-02-28 22:30 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 4.96 கோடி பேர் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல்


கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இதற்காக ஒட்டு மொத்தமாக 2 கோடியே 99 லட்சத்து 5 ஆயிரத்து 538 விண்ணப்பங்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்திருந்தது. அவற்றில் 2 கோடியே 74 லட்சத்து 6 ஆயிரத்து 722 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ளது.

இதையடுத்து, கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் வெளியிட்டார். அதன்படி, சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முதல் முறையாக 15 லட்சத்து 42 ஆயிரம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.

சராசரியாக 2.21 லட்சம்

இந்த சட்டசபை தேர்தலில் 2 கோடியே 51 லட்சத்து 79 ஆயிரத்து 219 ஆண்களும், 2 கோடியே 44 லட்சத்து 72 ஆயிரத்து 288 பெண்களும் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவார்கள். 3-ம் பாலினமாக 4,552 பேர் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள். கர்நாடகத்தில் ஒட்டு மொத்தமாக 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 59 பேர் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் அறிவித்துள்ளார்.

குறிப்பாக ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் சராசரியாக 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1 லட்சத்து 83 ஆயிரம் பேர் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

56,694 வாக்குச்சாவடிகள்

அதுபோல, பெங்களூரு நகரில் உள்ள 28 தொகுதிகளிலும் 46 லட்சத்து 4 ஆயிரத்து 190 ஆண்களும், 41 லட்சத்து 92 ஆயிரத்து 706 பெண்களும், 3-ம் பாலினமாக 1,439 பேரும் ஓட்டுப்போட தகுதியானவர்கள். ஒட்டு மொத்தமாக பெங்களூரு நகரில் 87 லட்சத்து 98 ஆயிரத்து 335 வாக்காளர்கள் உள்ளனர்.

கர்நாடகத்தில் மொத்தம் 56 ஆயிரத்து 694 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 18 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய பெலகாவி மாவட்டத்தில் மட்டும் 4,408 வாக்குச்சாவடிகள் உள்ளன. பெங்களூரு மத்திய மண்டலத்தில் 1,644 வாக்குச்சாவடிகளும், பெங்களூரு வடக்கில் 1,958 வாக்குச்சாவடிகளும், பெங்களூரு தெற்கில் 1,912 வாக்குச்சாவடிகளும், பெங்களூரு புறநகரில் 2,772 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

மேலும் செய்திகள்