கும்மிடிப்பூண்டி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி, ஒருவர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-02-28 22:45 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது மனைவி ஜெயந்தி (35). இவர்களது மகள்கள் மகாலட்சுமி (16), மோனிஷா (15). இவர்களுடன் செல்வத்தின் தாய் வள்ளியம்மாளும் (64) வசித்து வந்தார். செல்வம் இதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்கள் 5 பேரும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்து சத்தம் வருவதை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்்த்தனர். அப்போது நிலைமையை உணர்ந்து செல்வம் உள்பட 5 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் வள்ளியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் விஷம் குடித்த சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் செல்வத்தின் மூத்த மகள் மகாலட்சுமி, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் குடும்பமே தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் தெரிய வந்து உள்ளது. ஆனால் போலீசாரிடம் தற்கொலை முயற்சிக்கு குடும்ப பிரச்சினை மட்டுமே காரணம் என்று பொதுவாக செல்வம் கூறி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்