கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 367 பேர் எழுதுகின்றனர்

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 367 பேர் எழுதுகின்றனர்.

Update: 2018-02-28 22:45 GMT
கரூர்,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்கான 38 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 5 ஆயிரத்து 506 மாணவர்களும், 5 ஆயிரத்து 861 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 367 பேர் எழுதுகின்றனர். இதுதவிர தனித்தேர்வர்கள் 404 பேர் எழுத உள்ளனர். மாணவர்களுக்கான நுழைவு சீட்டுகள் அந்தந்த பள்ளிகளில் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து வினியோகிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ்-2 தேர்வு நடைபெறுகிற மையங்களில் மாணவர்களின் நுழைவு சீட்டு எண்களை இருக்கையில் நேற்று ஆசிரியர்கள் எழுதினர். கரூர் பசு பதீஸ்வரா பெண்கள் மேல் நிலைப்பள்ளி தேர்வு மைய வகுப்பறையில் நேற்று மாலை மாணவிகளின் நுழைவு சீட்டு எண்களை இருக்கையில் எழுதினர். பிளஸ்-2 தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு பணிகளுக்காக முதல்நிலை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் உள்பட மொத்தம் 963 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மையத்திற்குள் செல்போன் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்வு தொடங்குவதற்கு முன்பு மாணவ- மாணவிகள் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல பொதுத்தேர்வில் மாணவ- மாணவிகள் காப்பி அடித்தல் அல்லது முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி மற்றும் அரசு தேர்வுகள் துறை எச்சரித்துள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்டால் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடியாது. மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து செய்தல் அல்லது நிறுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு நோட்டீசுகள் பள்ளி தேர்வு மைய வளாகத்தில் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி முடிவடைகிறது. 

மேலும் செய்திகள்