வங்கிகளில் கடன் வாங்கி ரூ.700 கோடி மோசடி: தொழில் அதிபர், ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன் கைது

வங்கிகளில் ரூ.700 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை தொழில் அதிபர் ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2018-02-28 23:30 GMT
சென்னை,

சென்னை உள்பட தமிழகத்திலும், குஜராத், டெல்லி, மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ‘சுபிக்‌ஷா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1997-ல் இருந்து மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்தது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் மளிகைப் பொருட்கள், பழங்கள், மருந்துகள், செல்போன்கள் உள்ளிட்டவை விற்கப்பட்டு வந்தன.

‘சுபிக்‌ஷா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சுப்பிரமணியன் (வயது 50) ஆவார். இவரை ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன் என்று தான் அழைப்பார்கள்.

‘சுபிக்‌ஷா’ சூப்பர் மார்க்கெட்டை போல இவர் விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் விஸ்வபிரியா பைனான்ஸ் செக்யூரிட்டி என்ற பெயர்களில் நிதி நிறுவனங்களையும் நடத்தி வந்தார்.

இந்த நிதிநிறுவனத்தின் மூலம் பொதுமக்களிடம் முதலீட்டு தொகையைப் பெற்று ரூ.150 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அந்த வழக்கில், 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார்.

இந்த நிலையில், ‘சுபிக்‌ஷா’ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்காக, 13 வங்கிகளில் ரூ.700 கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக மீண்டும் ஒரு புகார் சுப்பிரமணியன் மீது கூறப்பட்டது. ரூ.700 கோடி கடன் தொகையை பெற்று ‘சுபிக்‌ஷா’ நிறுவனத்தில் மட்டும் முதலீடு செய்யாமல், பல்வேறு வகைகளில் சொத்துகள் வாங்கியதாக வந்த புகார்களின் பேரில், சுப்பிரமணியன் மீது மத்திய அரசின் அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அதில் உண்மை இருப்பது தெரியவந்ததால், முறைகேடான பணபரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் சுப்பிரமணியன் மீது அமலாக்கத்துறையினரும் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த வழக்கில் விசாரணைக்காக ஆஜராகுமாறு சுப்பிரமணியத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் சுப்பிரமணியன் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிவில் அமலாக்கத்துறையினர் தொழில் அதிபர் ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். நேற்று அவர் எழும்பூர் 14-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் மீது ஏராளமான புகார்கள் இருப்பதாலும், அதுபற்றி விசாரணை தொடர்ந்து நடப்பதாலும் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடவேண்டும் என்று அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் கோர்ட்டில் வாதிட்டார்.

தொழில் அதிபர் சுப்பிரமணியன் சார்பில் ஆஜரான வக்கீல், சுப்பிரமணியன் நிரபராதி என்றும், அவர் மீதான வழக்கை சட்டப்படி சந்தித்து வருகிறார் என்றும், அவரை சிறையில் அடைக்க இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு ரோஸ்லின் துரை தொழில் அதிபர் சுப்பிரமணியனை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விஸ்வபிரியா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் பணத்தை இழந்த ஏராளமான பேர்கள் நேற்று தொழில் அதிபர் சுப்பிரமணியனை அழைத்து வந்தபோது, கோர்ட்டில் கூட்டமாக கூடி நின்றனர். அவர்கள் சுப்பிரமணியனுக்கு எதிராக கோஷமிட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டினார்கள்.

தங்களுக்கு சேரவேண்டிய பணத்தை திரும்ப பெறுவதற்காக விஸ்வபிரியா நிதி நிறுவன முதலீட்டாளர்கள் நலச்சங்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை தொடங்கி நடத்தி வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். அவர்கள் ஆக்ரோஷமாக சுப்பிரமணியனை திட்டியதால் போலீசார் அவர்களை எச்சரித்தனர். அதன்பிறகு அவர்கள் அமைதியானார்கள்.

விஸ்வபிரியா நிதி நிறுவன முதலீட்டாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழில் அதிபர் சுப்பிரமணியனை ஜாமீனில் விடக்கூடாது என்று, நாங்களும் வக்கீல் வைத்து கோர்ட்டில் வாதாடுவோம். சுப்பிரமணியன் மிகப்பெரிய மோசடி பேர்வழி ஆவார். விஜய்மல்லையா, நிரவ்மோடி போன்ற தொழில் அதிபர்கள் வங்கிப்பணத்தை தான் கோடிக்கோடியாக ஏமாற்றினார்கள்.

ஆனால், சுப்பிரமணியன் எங்களைப் போன்ற பொதுமக்களிடம் இருந்து முதலீடாக பெற்று, கோடிகளை ஏப்பம் போட்டுவிட்டார். நான் மெக்கானிக்கல் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். நானும் எனது மனைவியும் ஓய்வுப்பெற்ற பணத்தை விஸ்வபிரியா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளோம். எங்களைப் போன்ற முதியவர்கள் சுமார் 950 பேர் விஸ்வபிரியா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து, ரூ.150 கோடி அளவிற்கு ஏமாந்துள்ளனர். எங்கள் சங்கத்தில் மட்டும் 650 பேர் பதிவு செய்துள்ளனர். எங்களுக்கு ரூ.95 கோடி செலுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதற்காக ரூ.50 கோடி அளவிற்கு சுப்பிரமணியனின் சொத்துக்களை முடக்கி கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. எங்களைப் போன்ற முதியவர்களை ஏமாற்றிய பாவம் சுப்பிரமணியனை சும்மா விடாது. அவரிடம் ஏமாந்த முதியோர்கள் 20 பேர் மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டனர்.

எங்களைப் போன்ற முதியவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்தால், நாங்களும் இறந்துவிடுவோம், பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டியதில்லை என்று சுப்பிரமணியன் செயல்படுகிறார். அது நடக்காது. சுப்பிரமணியனை ஜாமீனில் வெளியே விட்டால் இன்னும் பல ஆயிரம் பேரிடம் மோசடி செய்வார். அவரை ஆயுட்காலம் முடியும் வரை சிறையில் தள்ளவேண்டும்.

சுப்பிரமணியன் சென்னை ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படித்தவர். இதேபோல அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்தவர். மிகச்சிறந்த புத்திசாலி. நல்ல குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், தனது திறமைகளை தவறான வழியில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட தொடங்கிவிட்டார்.

அவர், வக்கீலுக்கும் படித்துள்ளார். வக்கீலாக வாதாடியும் வருகிறார். அவர் 49 நிறுவனங்களை நடத்தி வருவதாக அறிகிறோம். அவரிடமிருந்து பணத்தை திரும்ப பெறும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழில் அதிபர் சுப்பிரமணியனை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சுப்பிரமணியன் மீதான புகார்கள் பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சுப்பிரமணியன் மீது சி.பி.ஐ. போலீசாரும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்