திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2018-02-28 22:00 GMT
தாளவாடி,

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு இருசக்கர வாகனங்களை ஏற்றிய கனரக லாரி ஒன்று நேற்று வந்துகொண்டு இருந்தது. லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஓட்டினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் உள்ள 27-வது கொண்டைஊசி வளைவில் மாலை 4.30 மணி அளவில் லாரி வந்தது.

அப்போது பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, 27-வது கொண்டைஊசி வளைவில் இருந்து 26-வது கொண்டை ஊசி வளைவு வரை உருண்டபடி தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் டிரைவர் கோவிந்தராஜ் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதனை கவனித்த அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த கோவிந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சுமார் 30 அடி உயரம் கொண்ட மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தபோது மற்ற வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையின் ஓரத்தில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்