சாத்தான்குளம் அருகே ருசிகர சம்பவம்: தம்பி கடையில் தேங்காய் திருடி, அண்ணன் கடையில் விற்ற பலே திருடர்

சாத்தான்குளம் அருகே தம்பி கடையில் தேங்காய்களை திருடி, அண்ணன் கடையில் விற்ற பலே திருடரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-02-28 20:45 GMT
சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே தம்பி கடையில் தேங்காய்களை திருடி, அண்ணன் கடையில் விற்ற பலே திருடரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தேங்காய் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் சாலைப்புதூரை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 40). இவர் பேய்க்குளம்- பழனியப்பபுரம் ரோட்டில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் எதிரில் அவருடைய அண்ணன் ஸ்ரீதர் (47) காய்கறி கடை நடத்தி வருகிறார்.

கடந்த 24-ந்தேதி சுந்தரராஜின் கடையில் மொத்த வியாபாரி ஒருவர் 10 கிலோ தேங்காய்களை வாங்கி, ஒரு சாக்குப்பையில் வைத்து விட்டு, மற்ற பொருட்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த தேங்காய் மூடையை மர்மநபர் நைசாக திருடிச் சென்று, எதிரில் உள்ள ஸ்ரீதரின் காய்கறி கடையில் ரூ.470-க்கு விற்று பணத்தை வாங்கி சென்றார். சிறிது நேரத்தில் மொத்த வியாபாரி தனது தேங்காய் மூட்டை திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

மர்மநபர் சிக்கினார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுந்தரராஜின் கடைக்கு அந்த மர்மநபர் மீண்டும் வந்தார். அவர் சுந்தரராஜின் கடையின் முன்பிருந்த தேங்காய் மூட்டைகளில் இருந்த 21 தேங்காய்களை நைசாக திருடி ஒரு சாக்குப்பையில் போட்டு கொண்டார். பின்னர், அந்த தேங்காய்களை எதிரில் உள்ள ஸ்ரீதரின் கடையில் விற்க கொண்டு சென்றார். அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஸ்ரீதர், தம்பி சுந்தரராஜிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

உடனே சுந்தரராஜ் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று, அந்த நபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், தேங்காய்களை சுந்தரராஜின் கடையில் திருடி, ஸ்ரீதரின் கடையில் விற்க முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர், இதேபோன்று கடந்த 24-ந்தேதியும் இதே பாணியில் தேங்காய்களை திருடி விற்றது தெரிய வந்தது. மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த நபர் தேங்காய்களை திருடி விற்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

போலீசில் ஒப்படைப்பு

இதையடுத்து அந்த நபரை சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்த துரைப்பாண்டி (59) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தம்பி கடையில் தேங்காய்களை திருடி, அண்ணன் கடையில் விற்றவரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்