பொதுமக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு

பொதுமக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கூறினார்.

Update: 2018-02-28 22:45 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி பேசியதாவது:- மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உயர்நீதிமன்றம் உத்தரவிற்கிணங்க, இம்முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் வழக்குகளை குறைத்திடும் நோக்கத்திலும், அரசுத்துறை சார்ந்த திட்டங்கள் அனைவருக்கும் கிடைத்திடும் நோக்கத்திலும் இம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளை நடத்தும் பணிகளை செய்து வருகிறது. சுமுகமான முறையில் வழக்குகளை உடனடியாக தீர்த்து வைக்கவும் உதவுகிறது. இம்முகாமில் பொதுமக்கள் அளித்த 70 கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:- பொதுமக்களுக்கு சட்ட ஆலோசனைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால், இம்முகாம் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. சட்டத்துறை சார்பில் வழக்குகளிலிருந்து எவ்வாறு விடுபடுவது, வழக்குகளை குறைத்திடும் நோக்கில், வழக்குகளை நீதிமன்றங்களுக்கு வராமல் தடுப்பதே, இம்முகாமின் முக்கிய நோக்கமாகும். சிறு, சிறு பிரச்சினைகளை ஏற்றதாழ்வு பார்க்காமல் சமாதான முறையில் பொதுமக்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் தமிழக அரசின்திட்டங்கள் மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து குறும்படங்கள் காண்பிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறையின் சார்பில், வாரிசு சான்றிதழ்கள், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, 20 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கு ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கு நவீன செயற்கை உபகரணம் உள்பட மொத்தம் 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நீதிபதி சுமதி, கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், தலைமை குற்றவியல் நீதிபதி ரவி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதிராஜா, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, அரியலூர் வக்கீல் சங்க தலைவர் ஜெயக்குமார், நியூ பார் அசோசியேசன் தலைவர் முருகன் மற்றும் வக்கீல்கள், அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்