கட்டிடத்தின் அடித்தளம் போன்று மாணவர்களுக்கு அடிப்படை கல்வி முக்கியம், ரங்கசாமி கருத்து

கட்டிடத்துக்கு அடித்தளம் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று மாணவர்களுக்கு அடிப்படை கல்வி முக்கியம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேசினார்.

Update: 2018-02-28 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும்போதும், வேலைக்கு செல்லும்போதும் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை பார்க்கின்றனர். நன்றாக படிப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உண்டு. தனியார் நிறுவனங்கள் அதிக மதிப்பெண் எடுப்பவர்களைத்தான் வேலைக்கு தேர்வு செய்கின்றனர். ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் நன்றாக படித்தால் குடும்பத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

பிள்ளைகளால் உயர்ந்த குடும்பங்கள் நிறைய உள்ளன. நன்றாக படித்தவர்கள் மாதம் பல லட்சம் சம்பாதிக்கின்றனர். இத்தகைய பிள்ளைகளை பெற்ற குடும்பங்கள் நல்ல வளர்ச்சியை அடைகிறது. கட்டிடத்திற்கு அடித்தளம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அடிப்படை கல்வி மாணவர்களுக்கு முக்கியம். நன்றாக படித்தால்தான் மேல்நிலைப்பள்ளியில் நல்ல பாடப்பிரிவுகள் கிடைக்கும்.

பாடங்களை புரிந்து படிக்கவேண்டும். சிலர் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகள்தான் உயர்கல்வி என்று நினைக்கின்றனர். அது தவறானது. எந்த கல்லூரியில் எந்த படிப்பினை படித்தாலும் சிறப்பாக படித்தால் முன்னேற முடியும். இந்தியாவில் 2 லட்சத்துக்கும் மேல் ஆடிட்டர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்காக சி.ஏ. படிக்கலாம்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

மேலும் செய்திகள்