சொத்துவரி பாக்கியை செலுத்த சிறப்பு முகாம்: புதுச்சேரி நகராட்சி ஏற்பாடு

சொத்துவரி பாக்கியை செலுத்த சிறப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளதாக புதுவை நகராட்சி ஆணையர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-02-28 22:15 GMT
புதுச்சேரி,

புதுவை நகராட்சி ஆணையர் கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை நகராட்சிக்குட்பட்ட 1 முதல் 42 வார்டுகளில் உள்ள வீடுகள், கட்டிடங்களுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, சொத்துவரி மற்றும் கேபிள் டி.வி. கேளிக்கை வரி நிலுவை மற்றும் நடப்பு ஆண்டு 2017-18 வரையிலான வரிபாக்கியை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி நகராட்சியின் ஜப்தி மற்றும் வட்டி, அபராதவட்டியை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நலன்கருதி சிறப்பு வீட்டுவரி, சொத்து வரி வசூல் மையங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை உள்ள விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக வருகிற 3-ந்தேதி முத்தியால்பேட்டை பாரதி தாசன் வீதி வீட்டுவரி வசூல் மையம், கம்பன் கலையரங்க வீட்டுவரி வசூல் மையம், நெல்லித்தோப்பு வீட்டுவரி வசூல் மையம், முதலியார்பேட்டை மேரி வீட்டுவரி வசூல் மையம் ஆகிய இடங்களில் வழக்கமான மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாழைக்குளம் உதவி பொறியாளர் அலுவலகத்தில் சிறப்பு வரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

4-ந்தேதி வழக்கமான மையம் அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும், சிறப்பு வரி வசூல் மையம் பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரியிலும் வரி பாக்கி தொகையை செலுத்தலாம். மேலும் வீட்டுவரி, சொத்துவரி நடைமுறையில் உள்ள பொதுவரி விதிப்பு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே வீட்டுவரி, சொத்துவரி பாக்கிதாரர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியினை உடனே செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் வீட்டுவரி செலுத்த வரும்போது தங்களிடம் உள்ள பழைய வீட்டுவரி ரசீது, வீட்டுவரி கேட்பு அறிக்கையினை கட்டாயமாக கொண்டு வரவும். தங்கள் வீட்டுவரி, சொத்துவரியை பாக்கியின்றி செலுத்தி புதுச்சேரியை தூய்மையான நகரமாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்