ரூ.35¼ கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணி பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

தஞ்சையில் ரூ.35¼ கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணியை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

Update: 2018-02-27 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ராஜராஜசோழன் மணிமண்டபம் அருகே 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.35 கோடியே 39 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தரைதளத்தில் நிலஅபகரிப்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் மன்றங்கள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் என 9 நீதிமன்றங்களும், சட்ட பணி ஆணையமும் அமைக்கப்பட உள்ளது.

முதல்தளத்தில் குடும்பநல நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.

ஆய்வு

இந்த கட்டுமான பணியை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்(கட்டுமானம்) செந்தில்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, 63,270 சதுரஅடி பரப்பில் தரைத்தளமும், 29,376 சதுரஅடி பரப்பில் முதல்தளமும், 63,270 சதுரஅடி பரப்பில் இரண்டாம்தளமும் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 18 நீதிமன்றங்கள் அமைய உள்ளன. கட்டுமான பணி அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்றார். ஆய்வின்போது உதவி பொறியாளர் ரகு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்