28,616 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 616 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

Update: 2018-02-27 21:30 GMT
திருவண்ணாமலை,

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 682 மாணவர்களும், 5 ஆயிரத்து 326 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 8 பேரும், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 795 மாணவர்களும், 9 ஆயிரத்து 310 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 105 பேரும் தேர்வு எழுதுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 28 ஆயிரத்து 113 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 757 மாணவர்களும், 5 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 270 பேரும், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 932 மாணவர்களும், 9 ஆயிரத்து 414 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 346 பேரும் தேர்வு எழுதுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 28 ஆயிரத்து 616 பேரும் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வுக்காக திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 5 கட்டுக்காப்பு மையங்களும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 3 கட்டுக்காப்பு மையங்களும் என மொத்தம் 8 கட்டுக்காப்பு மையங்கள் உள்ளன.

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 57 தேர்வு மையங்களும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 32 தேர்வு மையங்களும் என மொத்தம் 89 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன. கட்டுக்காப்பு மையங்களில் இருந்து வினாத்தாள்களை கொண்டு செல்லவும், விடைத்தாள்களை சேகரிக்கவும் திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 14, செய்யாறு கல்வி மாவட்டத்தில் 8 என மொத்தம் 22 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக 96 முதன்மை கண்காணிப்பாளர்களும், 97 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் பணிபுரிய 1,733 அறை கண்காணிப்பாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் 140 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 75 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரமும், மொழிப்பாடத்தில் விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்