முசிறி போலீஸ் நிலையம் அருகே துணிகரம் ஒரே நாள் இரவில் 5 கடைகளில் திருட்டு

முசிறி போலீஸ் நிலையம் அருகே ஒரே நாள் இரவில் 5 கடைகளின் பூட்டை திறந்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-02-27 23:00 GMT
முசிறி,

முசிறியில் போலீஸ் நிலையம் அருகே துரைராஜ், பாலகுமார், நிர்மல் சம்பத்குமார் ஆகியோரின் மருந்து கடைகள் உள்ளன. இதே போன்று முகமதுஉமர் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை மற்றும் புதிய பஸ் நிலையம் அருகே பைபாஸ் ரோட்டில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான மருந்து கடை உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடைகளை பூட்டி விட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை தங்களது கடைகளை வழக்கம்போல திறப்பதற்கு வந்து பார்த்த போது கடைகளின் பூட்டுகள் திறந்து கிடந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

கடைகளின் பூட்டுகள் உடைக்கப்படாமல் போலி சாவி போட்டு திறந்த மர்ம நபர்கள் உள்ளே சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் இணைப்பை துண்டித்தும், சில இடங்களில் மின்சாரத்தை நிறுத்தியும் கடைகளில் கைவரிசை காட்டி உள்ளனர். பாலகுமாரின் மருந்து கடையில் ரூ. 20 ஆயிரம் மற்றும் பொருட்கள், நிர்மல் சம்பத்குமாரின் மருந்து கடையில் ரூ. 25ஆயிரம் மற்றும் பொருட்கள், முகமது உமர் மளிகை கடையில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள், நடராஜனின் மருந்து கடையில் ரூ. 5 ஆயிரம் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். திருட்டுப்போன பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என தெரிகிறது.

முசிறி போலீஸ் நிலையத்தின் அருகே உள்ள கடைகளில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த திருட்டு காரணமாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். திருட்டு நடைபெற்ற இடங்களில் திருடர்கள் கண்காணிப்பு கேமரா இணைப்பினை துண்டித்து சாமர்த்தியமாக கள்ளசாவி போட்டு திருடிச் சென்ற சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி தகவலறிந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கடைகளை நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்