தமிழக அரசு சுற்றுச்சூழல் விருதுகள் பெற தனிநபர், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2018-02-27 22:00 GMT
தேனி,

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர் ஆகியோருக்கு 2017-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி கவுரவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு விருதுக்கு சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விருதுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் தனிநபர்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தனிநபராக இருந்தால் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கல்வி பிரிவில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 3 ஆண்டுகளில் செய்த பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம்பெற வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஏற்கனவே ஒரு பிரிவில் விருது பெற்று இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. இதற்கான விண்ணப்பத்துடன் ‘இயக்குனர், சுற்றுச்சூழல் துறை’ என்ற பெயரில் ரூ.100-க்கான கேட்புக் காசோலை, 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.

அதேபோல், சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரைக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு மடல் வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை www.env-i-r-o-n-m-ent.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மார்ச் 15-ந்தேதிக்குள் கிடைக்கும் வகையில், ‘இயக்குனர், சுற்றுச்சூழல் துறை, பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்