ராஜபக்சேக்கு ஆதரவாக தமிழருக்கு எதிரான சக்திகள் செயல்படுகின்றன - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ராஜபக்சேவிற்கு ஆதரவாக தமிழருக்கு எதிரான சக்திகள் செயல்படுவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

Update: 2018-02-27 23:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துதுறை மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

ராமேசுவரத்தை சேர்ந்த டாக்டர் சண்டிகரில் இறந்த சம்பவத்திற்கு இந்தி மொழி தெரியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை திசை திருப்பும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே இதன் உண்மை நிலை தெரியவரும். ஐ.ஐ.டி. விழாவில் விநாயகர் துதி பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என்று நான் கருதினேன்.

ஆனால், நாங்கள் விழாவிற்கு தாமதமாக வந்ததால் முதலில் பாடியிருப்பார்களோ என்று நினைத்தேன். விழா முடியும் முன்னரே நாங்கள் வந்து விட்டதால் தேசியகீதம் பாடினார்களா? என்று தெரியவில்லை. கன்னியாகுமரியில் துறைமுகம் வரக்கூடாது என்று சிலர் மிகப்பெரிய சதியில் ஈடுபட்டு வருகின்றனர். இது முற்றிலும் தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரான செயல்ஆகும். இது தமிழருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். ஹம்பன் தோட்டா துறைமுகத்தினை, இலங்கை சீனாவிற்கு கொடுப்பதற்கு காரணம், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் எதிராக இலங்கை நிற்கும்போது பலமான ஆதரவு தேவை என்பதால் சீனாவிற்கு கொடுத்துள்ளது.

இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரத்திற்கு கப்பல் விட ஆர்வமாக உள்ளோம். பாரதி கண்ட கனவை நனவாக்கும் வகையில் இலங்கை-ராமேசுவரம் இடையே பாலம் அமைக்க விரும்புகிறோம். காலம் கனிந்து வரும் போது அது நிச்சயம் நடக்கும். கன்னியாகுமரி முதல் ராமேசுவரம் இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக தமிழன் என்ற முகமூடி அணிந்து கொண்டு மிகப்பெரிய சக்திகள் தமிழர்களுக்கு துரோகத்தை விளைவித்து வருகின்றன. தயவுசெய்து விழித்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில துணை தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்