சாலையோர கடைகளை அகற்றியதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு இருந்த சாலையோர கடைகளை அகற்றியதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-27 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள இடம் வனத்துறைக்கு சொந்தமானது. இதனால் அந்த இடத்தில் தனிநபர் யாரும் கடை வைக்க கூடாது. ஆனால் அதையும் மீறி மருத்துவக்கல்லூரி முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர தள்ளுவண்டிகள் கடைகள் இருந்தன. இந்த சாலையோர கடைகளை அகற்ற கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

இதை கண்டித்து சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்(சி.ஐ.டி.யு) சார்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், முன்னறிவிப்பு செய்யாமல் எந்தக் கடையையும் அகற்றுவதில்லை என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த முன்னறிவிப்பு இன்றியும் கடந்த 9-ந் தேதி சாலையோர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

இதை கண்டித்தும், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், மீண்டும் மருத்துவ கல்லூரி முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர கடைகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கக்கோரியும் நேற்று தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமதலிஜின்னா, துணை தலைவர் ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கணேஷ்நகர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

மேலும் செய்திகள்