விருதுநகரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு: மக்களுக்கான சேவைகள் அருகிலேயே கிடைக்க அரசு நடவடிக்கை

பொதுமக்களுக்கான அரசு சேவைகள் அருகிலேயே கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக விருதுநகர் எம்.பி. கூறினார்.

Update: 2018-02-27 22:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தென்மண்டல தபால் துறை இயக்குனர் பவன்குமார்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் விருதுநகர் தொகுதி எம்.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

இதற்கு முன்னர் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் விருதுநகர் மாவட்ட மக்கள் மதுரைக்கோ அல்லது நெல்லைக்கோ செல்ல வேண்டி இருந்தது. தற்போது அவர்களுக்கு இந்த சேவை விருதுநகரிலேயே கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ராமநாதபுரம் மாவட்டத்தை மூன்றாக பிரித்தார். விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் என்ற மூன்று மாவட்டங்களானது. இதன் மூலம் அந்தந்த மாவட்ட மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் எளிதில் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் நோக்கமே பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும், சேவைகளும் அவர்களுக்கு அருகிலேயே கிடைக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில் விருதுநகரில் இந்த பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தபால்துறை தென்மண்டல இயக்குனர் பவன்குமார்சிங் பேசியதாவது:-

தமிழகத்தில் வேலூர், சேலம் ஆகிய ஊர்களில் தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தென்மண்டலத்தில் முதன்முதலாக விருதுநகர் தலைமை தபால் அலுவலகத்தில் இந்த மண்டலம் தொடங்கப்படுகிறது. இங்கு இந்த மையம் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ராதாகிருஷ்ணன் எம்.பி.யின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஆத்திப்பட்டி, சாமிநத்தம் ஆகிய ஊர்களில் தபால் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விருதுநகரில் தபால்துறையின் வங்கி செயல்படுவதற்காக வங்கி மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாவட்டத்தில் உள்ள 285 தபால் அலுவலகங்களும் இந்த வங்கியின் கிளைகளாக செயல்படும். மாவட்டத்தில் இதுவரை தபால் அலுவலகங்களில் 55 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அதிக சேமிப்பு கணக்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கான முதல் விண்ணப்பத்தை ராதாகிருஷ்ணன் எம்.பி.யிடம் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் சண்முகமூர்த்தி வழங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.பி.க்கு தபால்துறையின் சார்பில், என் தபால்தலை என்ற ஆல்பம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் வரவேற்றார். விருதுநகர் தபால் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் நிரஞ்சளாதேவி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்